Monday, August 5, 2013

"தலைநகர் டில்லியில், 5 ரூபாய்க்கு, வயிறு நிறைய மதிய உணவு சாப்பிடலாம்' என, காங்கிரஸ் எம்.பி., ரஷீத் மசூத் கூறியுள்ளார். இவரை விட ஒருபடி மேலே சென்று, "1 ரூபாய்க்குக் கூட சாப்பாடு கிடைக்கிறது' என, மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இதற்கும் மேலாக, பழம் பெரும் நடிகரும், காங்., - எம்.பி.,யுமான ராஜ்பப்பர், "மும்பையில், 12 ரூபாய்க்கு, முழுச் சாப்பாடு கிடைக்கிறது' என, கூறியுள்ளார். நாட்டின் வளர்ச்சியின், தலை எழுத்தை நிர்ணயிக்கும், திட்டக் கமிஷன், கிராமங்களில், 27 ரூபாயும், நகரங்களில், 33 ரூபாயும் சம்பாதிப்பவர்கள் ஏழைகளாகக் கருதப்பட மாட்டார்கள் என, தெரிவித்திருப்பது, இந்த கமிஷனில் உள்ளவர்களின் அறிவுத் திறனை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இதன் தலைவராக, பொருளாதார மேதை, பிரதமர் மன்மோகன் சிங்கையும், துணை தலைவராக மான்டேக்சிங் அலுவாலியாவையும் பெற்றிருப்பது, இந்தியாவின், "பெரும் பாக்கியம்!' டில்லி ஜிம்மா மசூதி அருகே, 5 ரூபாய்க்கும், மும்பையில், 12 ரூபாய்க்கும் சாப்பாடு கிடைப்பதால், மற்ற இடங்களில் இருக்கும் ஏழைகள், அங்கு போய் வர முடியுமா? சென்னையில், "அம்மா' உணவகத்தில், 3 ரூபாய்க்கு, தயிர்சாதம், 5 ரூபாய்க்கு, சாம்பார் சாதம், இட்லி, 1 ரூபாய்க்கும் கிடைக்கிறது என்பதற்காக, அந்த இடங்களுக்கு எல்லோரும் போய் வர முடியுமா? இவ்வளவு கூறிய நம் அரசியல்வாதிகள், கோவில்களில், மதியம், அன்னதானம் அளிக்கப்படுவதை, இந்தியாவில், மதிய உணவு இலவசமாகக் கிடைக்கிறது என்று கூறலாமே. நட்சத்திர ஓட்டல்களில், "ஏசி' அறையில், ஓ.சி., சாப்பாடு சாப்பிட்டு, "ஏசி' காரில் போகும் இவர்கள், ரோட்டுக்கு வந்து, மக்களிடம் பேசி, உண்மை நிலையை அறிந்து, பின் தங்கள் கருத்துகளை வெளியிட வேண்டும். இல்லையேல், அடுத்த ஆண்டு, பார்லிமென்டுக்கு போய் வர முடியாமல், வீடுகளில் இருக்க வேண்டியது தான்!

No comments:

Post a Comment