Wednesday, August 7, 2013

சேது சமுத்திர கால்வாய் திட்டம், மறுபடியும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. ஈழத் தமிழர்கள் பேரைச் சொல்லி, தி.மு.க., விட்ட, நேரம் கடந்த போலிக் கண்ணீருக்கு, மதிப்பில்லாமல் போய் விட்டது. நைந்து, கிழிந்து போன, "டெசோ'வுக்கு, ஒட்டு வைத்து தைத்து, அரிதாரம் பூசி, அலங்காரம் செய்து, அரியணை ஏற்றி, ஆரவாரம் செய்தும் எடுபடவில்லை. கச்சத்தீவை மீட்பதற்காக, முதல் குரல் எழுப்பியதிலிருந்து, ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட முதல் அணுகுண்டுகளை கண்டு பிடித்தது வரை, எல்லாவற்றுக்கும் உரிமை கொண்டாடிப் பார்த்தால், அதை நம்புவதற்கு, எவரையும் காணவில்லை. சரி... இதெல்லாம் போகட்டும்... மாநில அரசுக்கு எதிராக, அறிக்கைகள் விடலாம் என்று முயற்சித்தால், நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல், சுடச் சுடக் கிடைக்கிறது பதிலடி. என்ன தான் செய்வது? என்ன தான் செய்ய என்று, கருணாநிதி மலைத்திருக்கும் நேரத்தில் தான் கை கொடுத்தது, சேது சமுத்திரக் கால்வாய் திட்டம். சேது சமுத்திரக் கால்வாய் மீது, இவருக்கு ஏன், இவ்வளவு கரிசனம்? தமிழக நலனுக்கா அல்லது பொருளாதார மேம்பாட்டுக்கா? பொருளாதார மேம்பாடு என்ற போர்வையில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டாலும், இதன் முக்கிய நோக்கம், இந்துக்கள் புனிதமாகக் கருதும், ராமர் கட்டிய பாலத்தைத் தகர்ப்பது தானோ என்ற சந்தேகம், இந்துக்களுக்கு வந்தால், அதற்கு அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில், தலைவரின் இதுவரை உள்ள நடவடிக்கைகள் அப்படி. இது போன்ற விஷயத்தை, ஒடிசா மாநிலத்தில் எப்படி அணுகியுள்ளனர் என்பதும், நாம் தெரிந்து கொள்ள வேண்டியதே. அங்கு, பன்னாட்டு நிறுவனமான, வேதாந்தா என்ற நிறுவனம், பல்லாயிரம் கோடிகள் முதலீட்டில், அலுமினிய தொழிற்சாலை நிறுவ முன் வந்தபோது, அதற்கு அங்குள்ள பழங்குடி மக்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. அம்மக்கள், அங்குள்ள மலையை, தெய்வமாக மதிக்கின்றனர். வேதாந்தாவின் தொழிற்சாலைக்குத் தேவையான கனிமங்களை, மலையைக் குடைந்தே எடுக்க முடியும். பழங்குடி மக்களின் தெய்வ நம்பிக்கைக்கு எதிராக உள்ள, இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு முன், அவர்களைக் கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டும் என்று, நீதிமன்றம் பணித்திருக்கிறது.
ஒரு சில ஆயிரங்களே உள்ள பழங்குடி மக்களின், தெய்வ நம்பிக்கையை மதிக்குமாறு கூறிய நீதிமன்றம், கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை மதிக்காமலா போகும்! ஆனால், இதைப்பற்றி எல்லாம், தலைவருக்கு கவலை இல்லை. இந்துக்கள் மத நம்பிக்கையை, நாம் என்ன செய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற துணிச்சல். தங்கள் மத உணர்ச்சியைக் காலால் மிதித்து, இத்திட்டத்தை, முன்னெடுத்துச் செல்ல முனைந்தால், இந்துக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பாடம் கற்பிக்க தீர்மானித்தால், "சாது மிரண்டால்' கதை தான்; ஏற்கனவே, மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் தி.மு.க.,வும், இந்த விஷயத்தில், அவர்களுக்கு, "ஜால்ரா' அடிக்கும் கூட்டணி கும்பலும், தாங்க மாட்டார்கள்.
மீனவர்களும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அடிப்படையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல... எந்த பொருளாதார மேம்பாட்டைக் காட்டி, மக்கள் உணர்வுகளை மதிக்காமல், இத்திட்டத்தை தீவிரப்படுத்த முயலுகின்றனரோ, அந்த பொருளாதார மேம்பாடும், தவறான கணக்கின் அடிப்படையில் தான் என்று எடுத்துக் காட்டப்படுகிறது. இந்நிலையில், வரும் தேர்தலில், தி.மு.க., மட்டும் மூழ்கப் போவதில்லை... இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதும், மதச்சார்பின்மை என்று, ஏதேதோ பிதற்றி விளக்கம் தருகிற, ஐக்கிய முற்போக்கு முன்னணியையும், தன்னுடன் இழுத்து மூழ்கப் போகிறது. இத்திட்டத்தை, கைவிட்டு விட்டதாக பொது அறிவிப்பு வெளியிடவில்லை என்றால், மக்கள், தி.மு.க.,வையும், அதன் கூட்டாளிகளையும் கைவிடத் தயங்க மாட்டார்கள்.

No comments:

Post a Comment