Friday, August 9, 2013

வாழ்க பண நாயகம்!"100 கோடி ரூபாய் இருந்தால் போதும்; ராஜ்யசபா எம்.பி, ஆகிடலாம்; பேரம் பேசி, 80கோடி ரூபாய் கொடுத்து தான் நான், எம்.பி., ஆனேன்; 20 கோடி ரூபாய் மிச்சம் பிடித்துள்ளேன்' என்று கூறியுள்ளார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., பீரேந்திர சிங்.
அதோடு, "இந்த உண்மையை, வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியதில், எனக்குப் பயமே இல்லை. கட்சியின் நடவடிக்கைக்கு, பயப்படப் போவதும் இல்லை. பெரும்பாலான எம்.பி.,க்களின் மனக்குமுறலைத் தான், நான் வெளிப்படுத்தி இருக்கிறேன்' என்று, மனம் திறந்து சொல்லியிருக்கிறார். இவர், துணிந்து, இப்படி வெளிப்படையாகப் பேசியதை, நாம் பாராட்டி யே ஆக வேண்டும். "ராஜ்யசபா எம்.பி., யாக, 100 கோடி; லோக்சபா எம்.பி.,யாக, 200 கோடி; பிரதமராக, 500 கோடி; துணை ஜனாதிபதியாக, 1,000 கோடி; ஜனாதிபதியாக, 2,000 கோடி' என, இப்படியொரு, "லிஸ்டை' பார்லிமென்டில் விளம்பரம் செய்து விட்டால் போதும்; அரசுக்கு கணிசமான வருமானம் வரும். அம்பானி சகோதரர் களுக்கு, இந்த தொகையெல்லாம் வெறும் ஜுஜுபி தான். கோடீஸ்வரர்களான டாடா, பிர்லா குடும்பத்தில், வேலைக்காரர்கள் கூட பணம் கொடுத்து எம்.பி., அமைச்சர் ஆகி விடலாம். சும்மா சொல்லக் கூடாது, நம்ம ஜனநாயக வியாபாரம், இன்று, கோடிக்கணக்கில் நடப்பதைப் பார்த்து, ஒவ்வொரு இந்தியனும், நிச்சயம் "பெருமைப்'பட வேண்டும். மகாத்மா காந்தி இன்று இருந்திருந்தால், அவர் எம்.பி., ஆக முடியாது. ராஜாஜி, படேல், வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றோர், அரசியலுக்கு வந்திருக்க முடியாது.
"பாருக்குள்ளே நல்ல நாடு; எங்கள் பாரத நாடு' என்று பாடிய பாரதியார், இந்த ஜனநாயக வியாபாரத்தைப் கண்டால், மனம் நொந்து, "நூடுல்ஸ்' ஆகியிருப்பார்.
தனலட்சுமியின் கருணை இல்லாதவர்கள் அரசியலுக்கு வரவே முடியாது. "பணம் பார்லிமென்ட்டிலே; குணம் கூவம் நதிக்கரையிலே' என்று பாடி, மனம் நொந்திருப்பார் கவியரசு கண்ணதாசன். வாழ்க பண நாயகம்!

No comments:

Post a Comment