Thursday, August 15, 2013

""நாட்டின் வளர்ச்சி குறித்து, என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?'' என, பிரதமர் மன்மோகனுக்கு, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மன்மோகன் சிங், டில்லி செங்கோட்டையில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உரையாற்றினார். வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், பிரதமர் வேட்பாளராக, பா.ஜ., சார்பில் முன்னிறுத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படும், குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, குஜராத்தில் புஜ் நகரில் நடந்த, சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். பிரதமரின் சுதந்திர தின உரைக்கு, பதிலளிக்கும் வகையில், மோடி பங்கேற்கும் விழா அமைக்கப்பட்டு இருந்தது.

"கண்டுக்கலையே':

விழாவில் உரையாற்றிய, நரேந்திர மோடி கூறியதாவது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று முன் தினம், தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய போது, எல்லையில், அத்துமீறி வரும் பாகிஸ்தானின் செயலை கடுமையாகக் கண்டித்து இருந்தார். ஆனால், பிரதமர், தன் சுதந்திர தின உரையில், பாகிஸ்தானின் செயலை கடுமையாகக் கண்டிக்கவில்லை. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் செயல் குறித்து, பிரதமர் பேசிய விதம் கவலை அளிப்பதாக உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக, பிரதமர், கடுமையாக பேசியிருக்க வேண்டும். ஆனாலும், ஏன் பேச பயப்படுகிறார் என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் நம் வீரர்களை, உற்சாகப்படுத்தும் வகையிலாவது பேசியிருக்க வேண்டும். பாகிஸ்தான் ராணுவம், நம் எல்லைக்குள் புகுந்து, நம் வீரர்களை சுட்டுக் கொன்று விட்டு போகிறது. மத்திய அரசு இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது; மத்திய அரசின் பொறுமை, நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் தவறான அணுகுமுறையால், பார்லிமென்ட் முடங்கிப் போய் உள்ளது. நான், பிரதமரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன்... "நீங்கள் ஒரு பெரிய நாட்டையே ஆளுகிறீர்கள்; நாங்கள் சிறிய மாநிலத்தை ஆட்சி செய்கிறோம். நாட்டின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், இதுவரை சாதித்தது என்ன என்பது குறித்தும், என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?'

நாட்டை மீட்கணும்:

குஜராத்தின் வளர்ச்சி நம் நாட்டின் வளர்ச்சி; இதை கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். சுதந்திர தின உரையில், ஒரு குடும்பத்தைப் பற்றி
மட்டுமே, பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சர்தார் வல்லபாய் படேல், லால்பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்கள் நினைவுகூர தகுதியற்றவர்களா? இவர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தானே? பிரதமரின் பேச்சில் அரசியல் கலப்பு இருக்கக் கூடாது. முதலில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து, நாட்டை மீட்க வேண்டும். 60 ஆண்டுகளுக்கு முன், நடந்த நேருவின் உரை பற்றி, பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கடந்த, 60 ஆண்டுகளில், காங்கிரஸ் என்ன செய்துள்ளது? நிலைமை மாறிய மாதிரி தெரியவில்லை? தற்போது, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கும், நாடு முன்னேற்றம் காணாமல் இன்னும் பின்தங்கியே இருப்பதற்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசே காரணம். சீன விவகாரத்தில், பிரதமர் பின்வாங்குகிறார்; வெளியுறவு கொள்கைகளின் அம்சங்கள் சரியில்லை. பொருளாதாரத்தை சீரமைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, மக்கள் முன் எடுத்து வைக்க, மன்மோகன் சிங் தவறிவிட்டார்.

ஜனாதிபதி தன் சுதந்திர தின உரையில், அதிகரித்து வரும் ஊழல் பற்றி கவலை தெரிவித்து இருந்தார்; ஆனால், பிரதமர் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் மவுனமாக இருக்கிறார். சோனியா குடும்பம் ஊழலில் சிக்கி தவிக்கிறது. உணவு பாதுகாப்பு மசோதா, மக்களின் உணவைப் பிடுங்கும் மசோதாவாக உள்ளது. இந்த மசோதா குறித்து, மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. ஊழலுக்கு முடிவு கட்ட, வாக்காளர்கள் வரும் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

No comments:

Post a Comment