Wednesday, August 7, 2013

"காங்கிரஸ் கட்சி, இந்தியாவுடன் இருக்கிறதா, இல்லை பாகிஸ்தானோடு சேர நினைக்கிறதா?'' என, பா.ஜ., - எம்.பி., யஷ்வந்த் சின்கா எழுப்பிய கேள்வியால், லோக்சபாவில் கடும் அமளி உருவானது.
லோக்சபாவில் அமளி :


ஜம்மு - காஷ்மீரில், கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேரை, பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக் கொன்ற விவகாரத்தால், லோக்சபாவில், நேற்று கடும் அமளி உருவானது. கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதோடு, பூஜ்ஜிய நேரத்திலும், சபை அலுவல்கள் நடக்க முடியாத சூழ்நிலை உருவானது. அமளி காரணமாக, சபை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபா நேற்று காலை கூடியதும், கேள்வி நேரம் துவங்கியது. ஆனால், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பிரச்னையை, பா.ஜ., - எம்.பி.,க்கள் எழுப்பி, பெரும் கோஷமிட்டனர். அவர்களுடன், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி எம்.பி.,க்களும் சேர்ந்து குரல் கொடுத்தனர். தெலுங்கானா தனி மாநில முடிவை எதிர்த்து, ஆந்திர காங்., - எம்.பி.,க்களும் கோஷமிட்டதால், கேள்வி நேரம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.
மீண்டும் சபை கூடி, பூஜ்ஜிய நேரம் ஆரம்பமான போதும், சபையில் அமைதி காணப்படவில்லை. ராணுவ வீரர்கள் பலி, தெலுங்கானா பிரச்னைகளை எழுப்பி, எம்.பி.,க்கள் கோஷமிட்டனர். இந்த கூச்சல், குழப்பத்திற்கு இடையே, ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி எழுந்து, உத்தரகண்ட் மாநில நிலச்சரிவு சம்பவம் குறித்து, அறிக்கை வாசித்தார். இதன்பின், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், பேச அனுமதிக்கப்பட்டார். அவர் பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியமானது. இந்த விஷயத்தில், எந்த விதமான சமரசத்திற்கும் இடமில்லை. ஏற்கனவே, சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது. தற்போது, பாகிஸ்தானும் வாலை ஆட்டியுள்ளது.சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து, இந்தியாவுக்கு விடுக்கும் அச்சுறுத்தலை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமே தவிர, மென்மையான போக்கை, மத்திய அரசு கடைபிடிக்க கூடாது. இவ்வாறு முலாயம் சிங் பேசினார்.
முன்னாள் நிதி அமைச்சரும், பா.ஜ., - எம்.பி.,யுமான யஷ்வந்த் சின்கா பேசும்போது, ""ஏற்கனவே, மும்பையில் பயங்கரவாத தாக்குதலை, பாகிஸ்தான் அரங்கேற்றியது. அதன்பிறகாவது, மத்திய அரசு, உறுதியுடன் செயல்பட்டிருக்க வேண்டும். உருப்படியான நடவடிக்கை எடுக்காமல், விட்டு விட்டது,'' என்றார்.
யஷ்வந்த் சின்கா, தொடர்ந்து பேசிய போது, காங்கிரஸ் எம்.பி.,க்கள் அவரை பேசவிடாமல் கோஷம் போட்டனர்.இதனால், எரிச்சல் அடைந்த சின்கா, ""பூஞ்ச் பகுதியில், ஐந்து ராணுவ வீரர்களை இழந்துள்ள நிலையிலும், மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க, தயங்குகிறது. உண்மையில், காங்கிரஸ், இந்தியாவுடன் இருக்கிறதா, இல்லை பாகிஸ்தானோடு சேர நினைக்கிறதா?'' எனக் கேட்டார்.

No comments:

Post a Comment