Tuesday, August 13, 2013

ஆபத்தான வகாபி பிரிவு
------------------
மொராதாபாத்: "இந்திய முஸ்லிம்கள் அனைவரும், சவுதியினர் நடைமுறையான வகாபி பிரிவை நிராகரிக்க வேண்டும். மதரசாக்களுக்கு சவுதி அரேபியாவில் இருந்து வரும் நிதியுதவிகளை கண்காணிக்கவும், தணிக்கை செய்யவும் மத்திய அரசு, ஒரு வாரியத்தை அமைக்க வேண்டும்' என, அகில இந்திய உலாமா மற்றும் மஷைக் வாரிய பொதுச் செயலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில், இஸ்லாத்தின் சூபி பிரிவைச் சேர்ந்த அகில இந்திய உலாமா மற்றும் மஷைக் வாரியத்தின் (ஏ.ஐ.யு.எம்.பி.,) முஸ்லிம் மகா பஞ்சாயத்து என்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய ஏ.ஐ.யு.எம்.பி.,யின் பொதுச் செயலர் மவுலானா சையது முகமது அஷ்ரப் கிச்சவுச்வி கூறியதாவது:
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், வகாபி பிரிவு கருத்துக்களை நிராகரித்து ஒதுக்க வேண்டும். அதன் மூலம் தான், இஸ்லாம் தனது இயல்பான சகிப்புத் தன்மையை உள்ளடக்கிய சூபி பிரிவுக்கு திரும்ப இயலும்.
நாட்டில் உள்ள மதரசாக்கள், தர்காக்கள், வக்பு வாரிய சொத்துக்கள் ஆகியவை வகாபி மற்றும் தியோபந்த் பிரிவினர் கைகளில் தான் உள்ளன. எங்களுக்குச் சொந்தமான மசூதிகள், மதரசாக்களைக் கூட மத்திய அரசு அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறது. மதரசாக்களுக்கு வரும் நிதியுதவி தணிக்கை செய்யப்படும் வகையிலும், அவற்றுக்கு சவுதி அரேபியாவில் இருந்து வரும் நிதியுதவிகளைக் கண்காணிக்கும் வகையிலும் மத்திய மதரசா வாரியம் ஒன்றை அமைப்பதற்கு மத்திய அரசு உடனடியாக ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஒரு பயங்கரவாதி உங்கள் ஆதரவை நாடுவார் என்றால், அல்லது உங்களை யாராவது ஒருவர் பயங்கரவாதியாக்க முயல்கிறார் என்றால், உடனடியாக அவரை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பிடித்துக் கொடுங்கள்.
இப்போது நமது உரிமைகளைக் கோர வேண்டிய நேரம் வந்து விட்டது. இனி வகாபி பிரிவை ஆதரிக்க மாட்டோம் என நாம் உறுதி பூண வேண்டும். நம் தாய்நாட்டின் ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டும் என உறுதி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மவுலானா கிச்சவுச்வி தெரிவித்தார்.
மகா பஞ்சாயத்தில் பேசிய வாரிய உறுப்பினர்கள், வகாபி பிரிவு கருத்துக்களை புறக்கணிக்க வலியுறுத்தினர். அதோடு, அந்தப் பிரிவைச் சேர்ந்த சிலரால் ஒட்டு மொத்த இஸ்லாத்திற்கும் களங்கம் ஏற்படுவதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய மவுலானா கிச்சவுச்வி,"இன்று நாட்டின் மதரசாக்கள், சவுதி பணத்தில் இயங்கக் கூடிய வகாபி அமைப்புகளின் பிடியில் சிக்கியுள்ளன. அவர்கள் அதிக கட்டுப்பாடு கொண்ட வகாபி பிரிவு நெறிகளை மட்டுமே போதிக்கின்றனர்' என்றார்.

No comments:

Post a Comment