Tuesday, August 6, 2013

ஓட்டலால் வந்த ஆபத்து...!
மும்பையில், "அதிதி' என்ற ஓட்டல் உள்ளது. நம்ம ஊரு, பவன் வகையறா ஓட்டல்கள் போல், இந்த ஓட்டல், மும்பையில் பிரபலம். இதனால், இந்த ஓட்டலில் எப்போதுமே, கூட்டம் முண்டியடிக்கும். ஒருவர் சாப்பிட்டு முடிக்கும் முன்பே, அந்த சீட்டை பிடிப்பதற்காக, ஏராளமானோர் அவரைச் சுற்றி நிற்பர். "கொஞ்சம் பொறு டார்லிங்... இதோ, சார் ரசம் வாங்கிட்டாரு. இப்போ எழுந்துடுவாரு' என, மனைவியை சமாதானப்படுத்தும் கணவர்களால், ஏற்கனவே சாப்பிட்டு கொண்டிருப்பவர், அரை குறை வயிற்றோடு, கை அலம்ப வேண்டியிருக்கும். இந்த ஓட்டலில், சமீபத்தில் ஒரு விளம்பர பலகை வைத்திருந்தனர். அதில், "ஸ்பெக்ட்ரம், நிலக்கரி போன்ற விவகாரங்களில், பணத்தை அடிப்பது, மத்திய அரசுக்கு எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு, இந்த ஓட்டலில் புல் மீல்ஸ் சாப்பிடுவதும், ரொம்ப அவசியம்' என, எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த, கதர்ச்சட்டைக்காரர்கள், கொந்தளித்து விட்டனர். "நடந்த தவறுக்கு, மன்னிப்பு கேட்காத வரை, ஓட்டலை திறக்க விட மாட்டோம்' என, ஏராளமான காங்கிரசார் திரண்டனர். ஓட்டல்காரர் களுக்கு ஆதரவாக, பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சியினர், மற்றொரு புறம் திரண்டனர். இந்த விவகாரம், காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரிந்ததும், மகாராஷ்டிரா முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, பிரித்விராஜ் சவானை, போனில் கூப்பிட்டு, வறுத்தெடுத்து விட்டனர். "மகாராஷ்டிராவில் காங்., ஆட்சி நடக்கிறதா அல்லது பா.ஜ., ஆட்சி நடக்கிறதா? ஒரு மாநிலத்துக்கு முதல்வராக இருக்கும் உங்களை, ஓட்டல்காரர்கள் கூட மதிக்க மாட்டேன்கின்றனரே...' என, சரமாரியாக அர்ச்சனை விழுந்தது. இதனால் நொந்துபோன பிரித்வி, "அரசியலில் இருந்தே ஓய்வு பெற்று விடலாமா' என, யோசிக்க துவங்கியுள்ளார்.

No comments:

Post a Comment