Friday, February 22, 2013

மரணத்தைத் தள்ளிப் போடும் மந்திரம்

மரணத்தைத் தள்ளிப் போடுவது என்பது இயலாத காரியம் என அனைவரும் நம்புகிறோம். ஆனால் அது உண்மையில்லை. நிச்சயமாக நமது ஆயுளை நம்மால் அதிகரித்துக் கொள்ள இயலும். அதற்கு நமது நடவடிக்கையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
பொதுவாக மற்றவர்களுக்கு உதவி செய்வதை அந்த கால இலக்கியங்களும், புராணங்களும் மிக உயர்வாக சொல்வதுண்டு. அது வெறும் இலக்கியத்துக்கும், வரலாறுக்கும், புராணத்துக்கும் மட்டும் ஏற்றது அல்ல. தற்போதைய கலி காலத்துக்கும் ஏற்றதாகவே உள்ளது.
உதவி புரிதல் என்பதில், உதவியைப் பெற்றவரை விட உதவி செய்தவருக்கு அதிக பலன் கிடைக்கிறது. அது எவ்வாறு எனில், ஒருவருக்கு நாம் உதவி செய்யும் போது அதனால் நமது மனம் மற்றும் மூளை நம்மை உயர்வாக எண்ணுகிறது. இதனால், நாம் மனம் குளிர்கின்றோம். அதாவது நமது இதயம் குதூகளிக்கிறது. எனவேதான், அந்த காலத்திலேயே உதவி செய்வதற்கு அவ்வளவு முக்கியத்தும் கொடுத்தார்களோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.
பொதுவாக அதிகப்படியான மன அழுத்தத்துக்கு உள்ளாகும் நபர்களை விட, எந்த வித சுய லாபமும் இன்றி மற்றவர்களுக்கு உதவி செய்து வாழும் நபர்கள், பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்கின்றனர். இதற்கு பலர் முன்னுதாரணமாகவும் விளங்குகிறார்கள்.
நீங்கள் செய்யும் புண்ணியத்தின் பலன் உங்களுக்குக் கிடைக்கும் என்று மறைமுகமாகக் கூறப்பட்டதன் பொருள் இதுதான். நீங்கள் அடையும் மன அழுத்தம், வருத்தம், கவலை அனைத்துமே உங்கள் உடலை எவ்வாறு பாதிக்கிறதோ அதேப்போல, நீங்கள் அடையும் சந்தோஷம், இன்பம், பெருமிதம் போன்றவையும் உங்கள் உடலை மேம்படுத்துகிறது.
இதற்காக நீங்கள் ஏதோ இந்த உலகத்தையே காக்க வேண்டும் என்று கூறவில்லை. சிறுசிறு உதவிகளை, உங்களால் இயன்றதை, உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் முன்பே சென்று உதவுங்கள். அதனால் அவர்கள் கூறும் நன்றியில் இருந்து நீங்கள் பெரும் இன்ப உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அப்போது, உங்கள் உடலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஹார்மோன்கள் சுரப்பதை நீங்களே உணர்வது போல் இருக்கும்.
வெளியிடங்களுக்குச் செல்லும் போது பேருந்து மற்றும் ரயில்களில் தற்போதெல்லாம் முதியவர்களுக்கும், குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்களுக்கும் இருக்கையை விட்டுத் தரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால், அவ்வாறு நாம் எழுந்து இடம் தரும் போது நமது கால்களில் வலி இருக்காது. மனதில் நிச்சயம் சந்தோஷம் இருக்கும். அதை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். இதேப்போல, வயதானவர்கள் சாலையை கடக்க காத்திருக்கும் போது தாமே சென்று உதவுதல், நமக்கு தெரிந்தவர்கள் உடல்நிலை பாதிக்கும் போது உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவுதல், மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான சில வேலைகளை செய்து கொடுத்தல் போன்றவை நிச்சயம் சிறிய உதவியாக இருந்தாலும், சந்தோஷத்தை ஏற்படுத்தும்.
நமக்கென்ன வந்தது என்று எப்போதுமே வாழாமல், நமக்கும் இது வரும் என்ற சிந்தனையுடன் செயல்பட்டால், நீண்ட ஆயுளோடு மட்டுமல்ல, நீண்ட ஆரோக்கியத்தோடும் வாழலாம

No comments:

Post a Comment