Friday, February 1, 2013

"உங்கள் பணம் உங்களுக்கே' என்ற திட்டத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்புள்ளது. சரியான நடைமுறை இல்லாத காரணத்தால், ஆதார அட்டையை வைத்து ஏமாற்றப்பட்டவர்கள் வழக்குத் தொடர முடியுமா?
 யுனீக் அடையாள ஆதார அட்டை மூலம் அவ்வளவு சமூகப்பாதுகாப்பு வழங்கல்களையும் - அதாவது முதியோர், விதவை பென்ஷன், மகப்பேறு மற்றும் கல்வி உதவித்தொகை எல்லாவற்றையும் வங்கிக் கணக்குக்கு மாற்றும்போது புதிய சிக்கல்கள் உருவாகும். இதுநாள் வரை அஞ்சலகத்தில் முதியோர் பென்ஷன் வாங்கியவர் பொதுவங்கியில் கணக்குத் தொடங்கி அஞ்சலகத்திலிருந்து வங்கிக்கு மாற்றப்படும் வரை எத்தனை அலைச்சல்கள் ஏற்படுமோ? இப்போதே வங்கிகளில் கூட்டம் தாள முடியவில்லை.
 வங்கிகளில் செல்வாக்கில்லா வாடிக்கையாளர்களுக்கு எப்படி "மரியாதைகள்' வழங்கப்படுகின்றன என்பனவெல்லாம் நாடறிந்த உண்மை. முதியோர் பென்ஷனை அலைந்து திரிந்து வாங்க, தன்னை வங்கியில் ருசுப்படுத்துவதற்குள் அவர் பரலோகத்திற்கேப் போய்விடலாம்.
 நூறு நாள் குளத்து வேலைத்திட்டம்போல் இதைச் செயல்படுத்த முடியாது. நூறு நாள் வேலைத்திட்டமும் சமூகப் பாதுகாப்பின் அம்சமாகத் தோன்றினாலும் விவசாய வேலைகள் பாதிப்புற்றுப் புஞ்செய் விவசாயம் - குறிப்பாக எண்ணெய் வித்துப் பயிர்கள், பருப்பு வகைப் பயிர் விவசாயம் குறைந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஊழல் மறுபக்கம் என்றாலும் சில மாநிலங்களில் சில மாவட்டங்களில் மட்டும் உருப்படியான பணி நிகழ்ந்துள்ளது.
 ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மறு வெற்றிக்கு நூறு நாள் வேலைத்திட்டம் கை கொடுத்ததுபோல் யூனிக் அடையாள ஆதார அட்டை மூன்றாம் முறை ஆட்சியைக் கைப்பற்ற, முன்னோடி (பைலட்) திட்டமாகச் சில இடங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஆறப்போட்டு விடலாம். ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் திட்டத்தின் தோல்விக்குரிய காரணங்களைக் கூறி சமாளித்துவிடலாம். பைலட் திட்டத்திற்குப் பணம் ஆறாக ஓடவிடப்படலாம்.
 கடந்த பல ஆண்டுகளாகவே உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு, உலக நிதியம் போன்ற அமெரிக்கக் கைப்பாவைகள் உணவு மானியம், உர மானியம் ஆகியவற்றை ரத்து செய்யும்படி ஆலோசனை கூறி வருகிறது.
 அமெரிக்காவும் இதை வலியுறுத்தி வந்துள்ளது. உணவு மானியத்தையும் நிறுத்த வேண்டும். அமெரிக்காவையும் திருப்திப்படுத்த வேண்டும். அதேசமயம் மூன்றாவது தேர்தல் வெற்றிக்கும் திட்டமிட வேண்டும் என்ற இலக்கில் "உங்கள் பணம் உங்களுக்கே' என்ற கோஷம் எழுந்துள்ளது.
 துரிதகதியில் யுனீக் அடையாள ஆதார காகிதங்கள் "பிட் நோட்டீஸ்'போல் வழங்கப்படுகின்றன. அப்படியே உணவு மானியம் ரத்தாகி அந்த மானியத் தொகை வங்கிக்கணக்கில் பயனீட்டாளர்களுக்கு வழங்கப்படுவதைச் செயல்படுத்தினால் தமிழ்நாடு அரசு வழங்கி வரும் இலவச அரிசித்திட்டம் செயல்படுமா?
 ஏனெனில் மாநிலங்களுக்குப் பொது வினியோக அரிசி மத்தியத் தொகுப்பிலிருந்துதான் வழங்கப்படுகிறது. உணவு மானியத்தைப் பணமாக வழங்கும்போது யுனீக் அடையாள ஆதார அட்டைப்படி குடும்பத் தலைவர் கணக்கில் வரவாகும். அப்பணத்தைக் கொண்டு அவர் வெளி அங்காடியில் விலை உயர்ந்த அரிசி வாங்குவாரா? விலை மலிந்த "டாஸ்மாக்' சரக்கு வாங்குவாரா? வறுமைக்கோட்டில் வாழக்கூடிய ஆண்களில் சுமார் 60 சதவீதம் பேர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள்; உணவு மானியம் ரத்தானால் மது விற்பனை உயரலாம். இதைப் பெண்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
 உங்கள் பணம் உங்கள் கையில்தான் என்ற நிலை மாறி ""எங்கள் பணம் ஆண்கள் கையில் போய்விட்டதே'' என்று பெண்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டுப் போடுவார்களா

No comments:

Post a Comment