Friday, February 1, 2013

புதிய திருத்தங்களுடன் "லோக்பால்' மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய திருத்தங்கள் என்ன என்பது விரிவாகத் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், லோக்பால் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் சி.பி.ஐ. (மத்தியப் புலனாய்வுக் கழகம்) அதிகாரிகளைக்கூட கொண்டுவரவில்லை என்பது மட்டும் தெளிவு.
 ஊழல் தொடர்பான கூடுதல் விசாரணை தேவைப்படும் அரிய வழக்குகளை - லோக்பால் விரும்பினால் - சி.பி.ஐ.-யிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கச் செய்யலாம் என்பதுதான் சென்ற ஆண்டின்போது, இதே விவகாரத்தில் மத்திய அரசு தெரிவித்த கருத்து. அதே கருத்தில் இப்போதும் நிலையாக நிற்கிறார்கள்.
 விசாரணை நடத்தும்படி ஒரு வழக்கை சி.பி.ஐ.-யிடம் ஒப்படைத்தால், லோக்பால் நீதிமன்றமும் மற்ற நீதிமன்றம் போலத்தான் ஆகிப்போகும். சி.பி.ஐ.யிடம் விசாரணையை விரைவுபடுத்துங்கள் என்று வலியுறுத்தலாம். சி.பி.ஐ. சரியாக, அக்கறையுடன் விசாரணை நடத்தவில்லை என்று குற்றம் சொல்லலாம். ஆனாலும் சி.பி.ஐ. அளிக்கும் அறிக்கையை நிராகரிக்க முடியாது.
 சி.பி.ஐ. என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை, அது மத்திய அரசின் சொல்லுக்கு கட்டுப்பட்டுத்தான் நடந்துகொள்ளும். ஆட்சிக்கு எண்ணிக்கை பலம் குறைந்தால் மாயாவதியின் ஊழல்களை புரட்டிப் பார்க்கும். முலாயம் சிங் யாதவின் ஊழல்களைத் தேடிப் போகும். அவர்கள் தங்கள் ஆதரவை மத்திய அரசுக்குத் தெரிவித்தவுடன் இந்த விசாரணைகள் மந்தப்படும், அல்லது மறக்கப்படும். சி.பி.ஐ. என்பது மத்திய அரசு, தனக்கு "சாதகமில்லாத நபர்களை' தனது வழிக்குக் கொண்டுவரப் பயன்படுத்துகின்ற மிக எளிய, ஆனால் வலிமையான ஆயுதமாகத்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது.
  "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் இதுவரை எந்தவிதமான, உருப்படியான தீவிர விசாரணையையும் சி.பி.ஐ. மேற்கொள்ளவில்லை என்பது உலகம் அறிந்த உண்மை. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் சிலருடைய பணம் எத்தனை கோடி ரூபாய் ஸ்விட்சர்லாந்து வங்கியில் இருக்கிறது என்று "விக்கி-லீக்ஸ்' பட்டியல் வெளியிடுகிறது. ஆனால் சி.பி.ஐ.யோ, ""எங்களால் மலேசியா, சிங்கப்பூர், மோரீஷஸ் தீவுகளில் ஆதாரங்களைத் திரட்ட முடியவில்லை. அவர்கள் "அரசியல் பலம் வாய்ந்தவர்களாக' இருக்கிறார்கள்'' என்று வெட்கமே இல்லாமல் சொல்கிறது.
  இந்த வழக்கில் பணப்பரிமாற்றம் எவ்வாறு நடந்துள்ளது என்பதை முறையாகத் தேடிச் சென்றாலேபோதும், அனைத்து ஆதாரங்களையும் திரட்டிவிட முடியும். ஆனாலும் இயலாமைக்குக் காரணங்களைப் பட்டியலிடுகிறது சி.பி.ஐ. காரணம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொடர்புடையவர்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிப்போர்.
  மத்திய அமைச்சர் வீட்டில் முறைகேடாக ஒரு தொலைபேசி இணைப்பகமே செயல்பட்டிருக்கிறது என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்தாலும், சி.பி.ஐ. இந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான அடிப்படை ஆதாரம் இருப்பதை சி.பி.ஐ.க்கான நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. விளைவு? குற்றம் செய்தவர்களைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு கொடுத்தால், "சி.பி.ஐ.க்கான நீதிமன்றத்தில்தான் இந்த உத்தரவு சாத்தியம்' என்று மனு தள்ளுபடியாகிறது. சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இந்த ஆதாரங்களை, சி.பி.ஐ. அளிக்காத நிலையில், அந்த நீதிமன்றமும் என்ன உத்தரவு வழங்க முடியும்?
  ஆகவேதான், அண்ணா ஹசாரே உள்ளிட்ட அனைவரும் சி.பி.ஐ. எனும் அமைப்பு லோக்பாலுக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். கடந்த டிசம்பர் மாதம் ஒரு பேட்டியில் ஆவேசமாகப் பேசிய அண்ணா ஹசாரே, லோக்பால் வசம் சி.பி.ஐ. இருந்தால், ப.சிதம்பரம் இந்நேரம் ஜெயிலில் இருப்பார் என்றுகூட குறிப்பிட்டார். அது தெரிந்த, மத்திய அரசு சி.பி.ஐ., இந்த லோக்பாலின் கட்டுப்பாட்டுக்குள் வருவதை எப்படி அனுமதிக்கும்?
  லோக்பாலின் கட்டுப்பாட்டுக்குள் சி.பி.ஐ. வராவிட்டாலும், சி.பி.ஐ.-க்கு இணையான ஒரு புலனாய்வு அமைப்பை அதே அதிகாரத்துடன் உருவாக்கி, லோக்பாலுடன் இணைந்த அமைப்பாகச் செயல்படச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு மாற்றுத்திட்டமாக முன் வைக்கப்பட்டது. ஆனால் அது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுத்திருப்பதாகத் தெரியவில்லை.
 இரண்டு புலனாய்வு அமைப்புகள் இருப்பதும் அவசியமில்லாதது. தேர்தல் ஆணையம், தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.)போல மத்தியப் புலனாய்வுத் துறையையும் அரசியல் சட்ட அமைப்பாக மாற்றுவது அல்லது "லோக்பால்' அமைப்பின்கீழ் கொண்டுவருவது, இவை இரண்டில் ஒன்றுதான் சரியாக இருக்கும்.
 அண்மையில் குஜராத் மாநிலத்தில் "லோக் ஆயுக்தா' நீதிபதி நியமனத்தை, மாநில அரசு மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கடுமையாக வாதாடிப் பார்த்தார். நீதிமன்றத்தில் கூட அவரது வாதம் எடுபடவில்லை. "மத்திய அரசுப் பிரதிநிதியாகிய ஆளுநர் அந்த நியமனங்களைச் செய்தது சரிதான்' என்று தீர்ப்பு வந்தது. இப்போதுள்ள திருத்தத்தில், "லோக் ஆயுக்தா' நியமனங்களை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என்று சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இது, காங்கிரஸ் ஆளும் கட்சியாக இல்லாத மாநில முதல்வர்களுக்குத் திருப்தியளிக்கக்கூடும். யார் கண்டது? லோக்பால் மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேரமாகக்கூட இது இருக்கலாம்.
 லோக்பால் கொண்டு வந்ததாக இருக்க வேண்டுமே தவிர, அதற்கு எந்தவித அதிகாரமும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது மத்திய அரசு. பாம்பு கீரிப்பிள்ளை சண்டையைக் கடைசி வரை காட்டாமலேயே காலம் தாழ்த்த முடியாததால், பாம்பின் பல்லைப் பிடுங்கிவிட்டு களத்தில் இறக்குகிறார்கள். இனி கீரிப்பிள்ளைகள் அஞ்சாமல் பாம்புகளை எதிர்கொள்ளும்!

No comments:

Post a Comment