Monday, January 28, 2013

காங்., கட்சியின் துணை தலைவராக, ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் லோக்சபா தேர்தலில், அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, தேர்தலை சந்திக்க தயாராகி விட்டது அக்கட்சி. ஆனால், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியுமா? ஏனெனில், சுதந்திர இந்தியாவின் அரசாங்கங்களிலேயே, மிக மோசமான ஊழல் குற்றச்சாட்டுகளும், நிர்வாக சீர்கேடுகளும், ஐ.மு., கூட்டணி ஆட்சியை, சந்தி சிரிக்க வைத்துள்ளது. இந்த ஆட்சியின் இமாலய ஊழல்கள், "2ஜி', காமன்வெல்த், நிலக்கரி என, அடுக்கிக் கொண்டே போகலாம். அதோடு, மக்களின் கஷ்டங்களைக் கண்டு கொள்ளாமல், ஏதாவது ஒன்றின் விலையை ஏற்றிக் கொண்டே இருப்பது, இக்கட்சியின் சிறப்பு. தெலுங்கானா, ஜன்லோக்பால், காவிரி போன்ற முக்கிய பிரச்னைகளை தீர்க்க எந்த முடிவுகளையும் எடுக்காமல், தள்ளிப் போடுவது; நீதிமன்ற குட்டு வாங்குவது; சி.பி.ஐ.,யை, தன் சுய அரசியல் லாபங்களுக்காக சீற விடுவது போன்றவை, காங்கிரஸ் நிர்வாகத்தின் அலங்கோலங்கள். இதுமட்டுமின்றி, ராகுலின் திறமை மீதும், மக்களுக்கு பெரிய அளவில் ஐயம் உள்ளது. அவர் பிரசாரத்திற்கு போன பெரும்பாலான தேர்தல்களில், காங்கிரஸ் தோல்வியே கண்டிருக்கிறது. மக்களை வசீகரிக்கவோ, நம்பிக்கை ஏற்படுத்தும் விதமான பேச்சோ, எழுத்தோ அவரிடம் இருந்து வெளிப்படவில்லை. ராகுலை, படைத் தளபதியாக்கி, தேர்தல் போரில் வெற்றி பெற்று விடலாம் என, காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால், தளபதியோ, போர் பயிற்சிகளையும், தந்திரங்களையும், இன்னும் முழுமையாக கற்றுக் கொள்ளவே இல்லை. இந்த நிலையில், ராகுலை பிரதமராக்கும் கனவு, பலிக்குமா?


No comments:

Post a Comment