Monday, January 28, 2013

மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, இந்து தீவிரவாதம் பற்றி கூறிய கருத்து பா.ஜ.க. தலைவர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்றவை தீவிரவாத இயக்கங்கள் என கருதும் மத்திய அரசு இவற்றை தடை செய்ய தயாரா?' என பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் சவால் விடுத்தார்.

இந்நிலையில், புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாவது:-

தவறான கொள்கைகளை கடைபிடித்து வரும் காங்கிரஸ் அரசு தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படுவதில் தோல்வியடைந்து விட்டது. காங்கிரசின் பலவீனமான கொள்கைகளால் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.

சுஷில்குமார் ஷிண்டே கூறிய இந்து தீவிரவாதம் குறித்த கருத்தினால் பாகிஸ்தான் மட்டுமல்ல, அங்குள்ள லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்களும், ஹபீஸ் சையீத் போன்ற தீவிரவாதிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுஷில்குமார் ஷிண்டேவை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியிலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். 1993-ம் ஆண்டில் நடைபெற்ற சூரத் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் குஜராத் மந்திரி முஹம்மது சூர்திக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

காங்கிரஸ் பிரமுகர் ஒருவருக்கு தீவிரவாத வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால் தீவிரவாதத்தை காங்கிரஸ் கட்சி ஊக்குவிக்கின்றது என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் கட்சியினர் தயாரா? பிறரை குற்றம் சொல்வதற்கு முன்னர் காங்கிரசார் முதலில் தங்களை திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment