Monday, January 28, 2013

உள்துறை அமைச்சரின் ஊரறிந்த பொய் மூட்டைகள்: எஸ்.குருமூர்த்தி

First Published : 28 January 2013 02:30 PM IST
“சம்ஜோதா எக்ஸ்பிரஸ் விபத்து, மற்றும் மெக்கா மஸ்ஜித், மலேகாவ்ன் வெடிகுண்டு சம்பவங்கள் எல்லாவற்றின் பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. இருந்தது. மேலும் இவையிரண்டும் நடத்துகின்ற பயங்கரவாதிகளுக்கான பயிற்சி மையங்கள் மூலம் ‘ஹிந்து பயங்கரவாதம்’ வளர்க்கப்படுகிறது” என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இம்மாதம் இருபதாம் தேதி வாய் மலர்ந்து அருளியிருக்கிறார். அப்படி இவர் சொன்ன மறுநாளே பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான எல்.இ.டியின் ஹவீஸ் சையத் ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யக் கோரி அறிக்கை விடுகிறார். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். மீதான பாகிஸ்தானுடைய எல்.இ.டி.யின் குற்றச்சாட்டுக்கு நமது அமைச்சர் சாட்சியாகிறார்! முதலில் 68 சக பிரயாணிகள் கொலையுண்ட பாகிஸ்தானிலிருந்து புறப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தைப் பற்றி நாம் இதுவரை அறிய வந்துள்ள கண்டுபிடிப்புகளை அலசுவோம்.
எல்.இ.டி-யே குற்றவாளி என்று கூறும் அமெரிக்க அரசும் ஐ,நா.சபையும்
“மற்ற இயக்கங்களுடன் ஒத்துழைக்க உதவும் தலைவனாக காஸ்மானி அரிஹ்ப் எனும் பயங்கரவாதி எல்.இ.டி.யுடன் இந்தியாவில் பானிபட்டில் நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சதி உட்பட பல பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறான்.” இப்படித்தான் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பொருளாதாரக் கட்டுப்பாடுக் குழுவின் 29.6.2009 தேதியிட்ட தீர்மானம் எண்: 1267-ல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தாவூத் இப்ராஹிம் கொடுத்த பண பலத்துடன் இவன் மேலும் பணம் சேர்த்து எல்.இ.டி.க்கும் அல்-கொய்தாவுக்கும் உதவியிருக்கிறான் என்றும் சொல்லி, அத்தீர்மானம் “அவர்களின் அந்த உதவிக்குக் கைமாறாக பானிபட்டில் 2007 பிப்ரவரியில் நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சதிக்கு ஆட்பலம் கொடுத்து உதவியிருக்கிறது” என்றும் திட்டவட்டமாகச் சொல்கிறது. அந்த விவரமெல்லாம் ஐ.நா. சபையின் அதிகார பூர்வமான இணைய தளத்தில் உள்ளவைகளே.
அது வெளியிடப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து 2009 ஜூலை 1-ல் அமெரிக்க அரசு நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு இப்படி வேறு, சொல்கிறது: “காஸ்மானி அரிஹ்ப் எல்.இ.டி.யுடன் கை கோர்த்துக்கொண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சதி உட்பட பல பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறான்.” அவர்களது நிர்வாக ஆணை எண் 13224-ல் இந்த காஸ்மானி உட்பட நான்கு பேர்கள் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தச் செய்திக் குறிப்பு இன்னமும் அமெரிக்க அரசாங்கத்தின் இணைய தளத்தில் இருக்கிறது. இப்படியாக ஐ.நா. பாதுகாப்பு சபையும், அமெரிக்க அரசும் எல்.இ.டி.-யையும், காஸ்மானியையும், தாவூத் இப்ராஹிமையும் சம்ஜோதா சதியில் குற்றவாளிகள் என்று அறிவித்திருக்கின்றனர். ஆக எல்.இ.டி.-யையும், பாகிஸ்தானையும் குற்றவாளிகளாகக் காட்டும் பல ஆதாரங்களில் இதுதான் முதலாவது.
பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்:
ஐ.நா.வும் அமெரிக்க அரசும் எல்.இ.டி. மீதும், காஸ்மினி மீதும் கட்டுப்பாடுகள் விதித்து ஆறு மாதங்கள் கழிந்தபின், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரான ரஹ்மான் மாலிக்கே பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு சம்ஜோதா சதியில் பங்கு இருந்ததை ஒத்துக்கொண்டார். ஆனாலும் அவர்கள் இந்த சம்பவத்தில் இந்திய அரசால் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராணுவ அதிகாரி புரோஹித் தான் அவர்களை வேலைக்கு அமர்த்தினார் என்றும் சந்தடி சாக்கில் எடுத்துவிட்டார் (இந்தியா டுடே ஆன்லைன் 24.1.2010).
சம்ஜோதா சதியில் ஹெட்லீயின் பங்கு – அமெரிக்காவின் கண்டுபிடிப்பு:
ஐ.நா மட்டுமல்ல, அமெரிக்க அரசு மட்டுமல்ல, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரின் ஒப்புதலும் கூட அல்ல; அமெரிக்காவில் உள்ள தனியார் ஆய்வுகள் இந்த விஷயத்தில் இதற்கும் மேலான உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கின்றன. சுமார் பத்து மாதங்களுக்குப் பிறகு அமெரிக்கப் பத்திரிகையாளரான செபாஸ்டியன் ரோடெல்லா என்பவர் தனது ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்த துப்புகள் பற்றி “2008 மும்பை நகரத் தாக்குதல் பற்றி அமெரிக்க உளவுத் துறைகளுக்கு கிடைத்த முன்னெச்சரிக்கை” என்ற தலைப்பு கொண்ட தனது அறிக்கையில் இப்படிப் பிட்டு பிட்டு வைத்திருக்கிறார்:
“அவரது மூன்றாம் மனைவியான பைசா ஔடால்ஹா தனது கணவர் டேவிட் கோல்மன் ஹெட்லே சம்ஜோதா சதியில் சம்பந்தப்பட்டிருந்ததாக தானே 2008-ல் சொல்லியிருக்கிறார். அந்தத் தகவல் 2010-ல் வெளியிடப்பட்டது. மேலும் தனக்குத் தெரியாமல் தானும் அதில் சம்பந்தப்படுத்தப்பட்டதாகவும் ஔடால்ஹா சொல்லியிருக்கிறார்.” (ஆதாரம்: 5.11.2010 தேதியிட்ட வாஷிங்டன் போஸ்ட்).
சில நாட்களுக்குப் பின், இதன் தொடர்பாக ஔடால்ஹா பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதர் அலுவலகத்திற்குச் சென்று 2008-ல் நடந்த மும்பை தாக்குதல் பற்றிய துப்பு ஒன்றைக் கொடுக்கும் போதும், ஹேட்லிக்கு சம்ஜோதா சதியில் இருந்த தொடர்பு பற்றி மறுமுறையும் சொன்னதாக ஏப்ரல் 2008-ல் ரோடெல்லா எழுதுகிறார். ஆக இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் தாக்குதலில் எல்.இ.டி.யின் பங்கு பற்றி குறைகூறிப் பேசிக்கொண்டிருந்தாலும், இன்னமும் முடியாத அந்த சம்ஜோதா வழக்கில் அமேரிக்கா ஹேட்லியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை என்று ரோடெல்லா எழுதுகிறார் (14.11.2010 வாஷிங்டன் போஸ்ட்). இப்படியாக நடுநிலையான அமெரிக்காவில் நடந்த தனியார் விசாரணையிலும் சம்ஜோதா சதியில் பாகிஸ்தானும், எல்.இ.டி.யும் பங்கு பெற்றது பற்றி தெளிவாகிறது.
மயக்க மருந்துச் சோதனையில் தெளிவான சிமி(SIMI)யின் பங்கு:
2007-ல் சம்ஜோதா சதியைப் பற்றிய விசாரணை துவங்கியதுமே அதில் சிமியின் (SIMI : இந்திய இஸ்லாமிய மாணவர்களின் இயக்கம்) பங்கும், எல்.இ.டி.யின் பங்கும் தெளிவாகத் தெரிந்தது (இந்தியா டுடே 19.9.2008). “மும்பை ரயில் மற்றும் சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்புகளில் பாகிஸ்தானின் சதி” என்ற தலைப்பிட்ட கட்டுரையில், சம்ஜோதா சதியில் எல்.இ.டி. மற்றும் பாகிஸ்தானின் நாச வேலைகளைப் பற்றி விவரமாக நகோரி என்பவர் சொன்னதை இந்தியா டுடே சுட்டிக்காட்டி இருந்தது. அந்தக் கட்டுரை சிமியின் தலைவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அதிகார பூர்வமாக தகவல் பெற்றதன் அடிப்படையில் எழுதப்பட்டது. சிமியின் பொதுச் செயலாளர் சப்தார் நகோரி, அவரது சகோதரன் கம்சோரி நகோரி, மற்றும் அமில் பர்வேஜ் போன்ற சிமியின் தலைவர்களுக்கு, சம்ஜோதா சதி நடந்து மூன்று மாதங்களுக்குப் பின், 2007 ஏப்ரல் மாதத்தில் பெங்களூரில் நடத்திய மருந்துச் சோதனை மூலம் கண்டறிந்த தகவல்கள் தமக்குக் கிடைத்ததாக இந்தியா டுடே பத்திரிகை அவைகளை வெளியிட்டுச் சொன்னது.
அந்தச் சோதனை மூலம் இந்திய எல்லைக்கு அப்பால் இருந்த பாகிஸ்தான் குடிமக்கள் சிலரின் உதவியால் சிமியைச் சார்ந்த சில உறுப்பினர்கள் சம்ஜோதா சதியை இயக்கியதாகவும், அதில் சப்தார் நகோரிக்கு நேரடிப் பங்கு இல்லை என்றும், எஹ்தேஷம் சித்திக்கி மற்றும் நாசிர் என்ற இரண்டு சிமி உறுப்பினர்கள் நேரடியாக ஈடுபட்டதாகவும், சகோதரன் நகோரி உள்ளிட்ட இன்னம் சிலர் அதில் பங்கு பெற்றதாவும் தெரியவந்தது. மேலும் இந்தூர் கடாரியா மார்கெட்டில் இருந்து வெடிகுண்டு வைக்கப்பட்ட பெட்டியின் உறையை பாகிஸ்தானியர்கள் வாங்கியதாகவும், அவர்களுக்கு சிமியின் உறுப்பினர் ஒருவன் உறையைத் தைக்க உதவியதாகவும் ஆன பல விவரங்கள் வெளிவந்தன. சம்ஜோதா குண்டு வெடிப்பில் மொத்தம் ஐந்து குண்டுகள், மற்றும் அவற்றை இயக்குவதற்கான காலந் தாழ்த்தி வெடிக்க உதவும் கருவியும் பெட்டியில் வைக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தன.
மகாராஷ்டிரப் போலீசின் திரிபு வேலைகள்:
இப்படியாக உலகமே அறிந்துள்ள உண்மைகளைத் தொடர்ந்து ஏன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை? எப்படி சதியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மேல் இருந்த பழி இந்துக்களின் மேல் திசை திருப்பப்பட்டது? 2008-ல் நடந்த மேல்காவ்ன் வெடிகுண்டு சதியையும், சம்ஜோதா சதியையும் பிணைக்கும் ஒரு மகா சதியில் மகாராஷ்டிர போலீசில் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று இதனால் சந்தேகப்பட வாய்ப்பு இருக்கிறது. நவம்பர் 2008-ல் நடந்த சம்ஜோதா சதியில் பாகிஸ்தான் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக சிமியும் ஈடுபட்டதாக இவ்வளவு வெளிப்படையான காரணிகள் இருக்கும் போது, மொத்தமாகவே திசை திருப்பும் முகமாக மகாராஷ்டிராவின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) தனி அமர்வு நீதி மன்றத்தில் அரசு வக்கீல் மூலமாக, மேல்காவ்ன் சதியில் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து தந்ததில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட படை வீரர் கர்னல் புரோஹித், சம்ஜோதா சதிக்கும் பகவான் என்பவர் மூலம் வெடிமருந்து கொடுத்து உதவினார் என்று குற்றம் சாட்டியது (இந்தியன் எக்ஸ்பிரஸ் 15.11.2008).
அதை அடுத்த 48 மணி நேரத்துக்குள்ளாகவே இந்தியா டுடே ஆன்லைன் (17.11.2009) அந்த குற்றச்சாட்டை மறுத்து, தேசிய பாதுகாப்புப் படை ( NSG ) நடத்திய சோதனை மூலம் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து அதில் உபயோகிக்காததையும், பொட்டாசியம் குளோரேட் உபயோகிக்கப்பட்டிருப்பதையும் சம்ஜோதா சதியைத் துப்புத் துலக்கியவர்கள் தனக்குச் சொன்னதாக விவரங்களை வெளியிட்டனர். அது தவிர அன்றைய உள்துறை அமைச்சரான ஷிவ்ராஜ் படீல் பத்திரிகை நிருபர்கள் சந்திப்பில் சம்ஜோதா சம்பவத்தில் ஆர்.டி.எக்ஸ். உபயோகிக்கவில்லை என்றும், வேறு ஏதோ புதிய மருந்து உபயோகித்துள்ளனர் என்றும் சொன்னதை அதே பத்திரிகை நினைவூட்டிச் சொன்னது. உடனே அன்றே (17.11.2009) ATS வக்கீல் மூலம் படை வீரர் புரோஹித் சம்ஜோதா சதியில் சம்பந்தபட்டார் என்ற தனது முந்தைய அறிக்கையை திரும்பப் பெற்றது (தி ஹிந்து 19.11.2008).
ஆனாலும் அந்த ATS’ன் அறிக்கை, அடுத்து வந்த 48 மணி நேரத்தில், வெறும் வாயை மெல்லும் எதிரிகளுக்குத் தேவையான அவலைக் கொடுத்தது போல ஆகிவிட்டது. குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டிய பாகிஸ்தானோ, இந்தியாவுடன் அப்போது வரவிருந்த நவம்பர் 25, 2008 செயலாளர்கள் மட்டக் கூட்டத்தில், சம்ஜோதா சம்பவத்தில் வீரர் புரோஹித்தின் பங்கு பற்றி வினா எழுப்பப் போவதாக அறிவித்தது. இறுதியாக ஜனவரி 20, 2009 அன்று மகாராஷ்டிராவின் ATS அமைப்பு சம்ஜோதா சதிக்கு கர்னல் புரோஹித் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தை கொடுக்கவில்லை என்று அதிகார பூர்வமாக அறிவித்தனர். இப்படித்தான் சம்ஜோதா சதியின் பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களான எல்.இ.டி. மற்றும் சிமி குழுவிலிருந்து, முதலில் வீரர் புரோஹித்தின் மேல் விழுந்து, பின்பு அவர் மூலம் காவி நிறத்துக்கு வந்தடைந்தது. இப்படி அதிரடியாக பழி திசை திரும்பியதற்குக் காரணமான அறிக்கையை விடுத்த மகாராஷ்டிர போலீசில் அதற்கு எவரெவர் காரணமாயிருந்தனர் என்பதைத் துப்புத் துலக்க ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அதுதான் முந்தைய காலத்தில் இருந்து அந்தப் போலீசில் ஊடுருவிய தாவூத் இப்ராஹிமின் செல்வம் விளையாடக்கூடிய வினை.
அமைச்சர் ஷிண்டே உண்மையைத்தான் சொல்கிறார் என்று எவராவது சொன்னால், அமெரிக்க அரசும் ஐ.நா.வும் காஸ்மானி, தாவூத், எல்.இ.டி. இவர்கள் அனைவர் பற்றியும் சொல்வது பொய் என்றாகிறது. மேலும் ஔடால்ஹாவும், வாஷிங்டன் போஸ்டும் கூட எல்.இ.டி. மற்றும் பாகிஸ்தானை வேண்டுமென்றே சந்தியில் இழுக்க என்றும் பொய் சொல்கிறது; சிமி தலைவர்களை சோதித்து நடந்ததை அறிந்ததும் பொய்யே, பாகிஸ்தானின் ரஹ்மான் மாலிக் சொல்வது என்று இப்படி எல்லோருமே பொய் சொல்கிறார்கள் என்றுதானே ஆக முடியும்? இதைவிட கேவலமானது என்று வேறு ஏதாவது இருக்க முடியுமா?
உண்மைக்குப் புறம்பான இந்தக் கூத்து குறிப்பிட்ட வாக்காளர்களை வசீகரிக்கும் எண்ணத்துடன் பேசும் ஷிண்டே அவர்களின் பொய்யுரை அன்றி வேறு என்ன? சம்ஜோதா சதி பற்றிய கணிப்பில் இப்படி இவர்கள் தடம் புரண்டனர் என்றால், 2006- ல் நடந்த மேல்காவ்ன் சம்பவத்திலோ மகாராஷ்டிரத்தின் ATS அமைப்பின் குற்றப் பத்திரிக்கையிலேயே சிமியின் தொண்டர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர் என்று அவர்களே சொன்னதாகப் பதிவு செய்தும், அப்படி ஒத்துக்கொண்டவர்களை அதிலிருந்து மீட்டு காப்பாற்றவும், இந்துக்கள் சிலர் மேல் பழி போடவும் CBI அமைப்பு முயற்சிக்கின்றது. ஆக மாலேகாவ்ன் வழக்கு விநோதமாக சாட்சி சொல்பவர்களையே எதிர் சாட்சி சொல்லவைத்து வாதியைப் பிரதிவாதியாக்கிக் கொண்டிருக்கிறது! அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கர்னல் புரோஹித்தும் அவரது கூட்டாளிகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மோகன் பாக்வத் அவர்களையும் இந்திரேஷ் குமார் அவர்களையும், அவ்விருவரும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI-யிடம் இருந்து கையூட்டு பெற்றதனால், கொலை செய்யத் திட்டமிட்டதாகக் காட்ட சாட்சியங்களைத் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள் (அவுட்லுக் 19.7.2010). நம் தேசத்தின் எதிரிகளே ஒழிக்க நினைக்கும் ஆர்.எஸ்..எஸ். எப்படி அவர்களுடன் கை கோர்த்துச் செயல் ஆற்றியிருக்க முடியும்? ஷிண்டே அவர்களுக்கு தான் என்ன பேசுகிறோம் என்று தெரிகிறதா?
இதனால் நிரூபணம் ஆவது என்னவென்றால்: அகில உலக பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஹவீஸ் சையது தான், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒழிக்க நினைக்கும் நமது அமைச்சர் ஷிண்டேயின் தோழன். சில ஆயிரம் வாக்குகளை மனத்தில் வைத்துக்கொண்டு செயல்படும் இத்தகைய ஷிண்டே இன்னும் என்ன மாதிரியான பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவாரோ?

No comments:

Post a Comment