Friday, January 24, 2014

சேவகனைத் தேர்ந்தெடுங்கள்; வளர்ச்சியைத் தருகிறேன்: மோடி உருக்கம்
கோரக்பூர்: இதுவரை தலைவர்களைத் தேர்ந்தெடுத்த நீங்கள், நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலில் ஒரு சேவகனை (என்னை) தேர்ந்தெடுங்கள்; என்னை ( பா.ஜ.,) வெற்றி பெறச் செய்தால், நீங்கள் காட்டிய அன்புக்கு வட்டியாக வளர்ச்சியை சேர்த்து திருப்பித் தருவேன் என்று பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உருக்கமாக கேட்டுக் கொண்டார்.

வரும், ஏப்ரல், மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில், மூன்று மாதங்களுக்கு முன்பே, மும்முரமாக இறங்கி உள்ள, நரேந்திர மோடி, நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

4 லட்சம் பேர்:

உ.பி., மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான, கோரக்பூரில், நேற்று நடந்த, பிரமாண்டமான, பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில், மோடி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

நான்கு லட்சம் பேர் பங்கேற்ற அந்த கூட்டத்தில், மோடி பேசியதாவது:
இந்த தொலைதூரப்பகுதியிலும் என் பேச்சைக் கேட்க இந்த அளவுக்கு கூட்டம் வருகிறதென்றால், காற்று திசை மாறி அடிக்கிறது என்றுதானே பொருள். காங்கிரசிடமிருந்து இந்தியர்கள் விரைவில் விடுதலை பெறுவார்கள் என்பதையே இது காட்டுகிறது. கடந்த டிசம்பர் 15ம் தேதி, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளன்று நடைபெற்ற ஓட்டத்தில் பங்கேற்ற உத்தர பிரதேச இளைஞர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். உ.பி.,யின் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்ற இந்த ஒற்றுமை ஊர்வலம் ஒரு உலக சாதனையாக உள்ளது. ஒரு நோக்கத்துக்காக, 50 லட்சம் பேர் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர். பட்டேலுக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலை நிறுவப்படும்; அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையை விட இருமடங்கு உயரம் இருக்கும். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களுடைய பழைய உழவுக் கருவிகளை இதற்காக வழங்கியுள்ளனர்.

பா.ஜ., மீது தலித்கள் நம்பிக்கை:

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 4ல் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. தலித்களையும் பழங்குடியினரையும் முக்கியமானவர்களாக எவரும் கருதுவதே இல்லை; அவர்களை வெறும் ஓட்டு வங்கிகளாக மட்டுமே பார்க்கின்றனர். 4 மாநிலங்களிலும் பா.ஜ., பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானில் 34 தனித் தொகதிகளில் பா.ஜ., வென்றுள்ளது; காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. சட்டிஸ்கரில் 10 தனித் தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தலித்களும் பழங்குடியினரும் தற்போது பா.ஜ., மீது நம்பிக்கை வைத்துள்ளனர், இந்த நாடு, ஏழை நாடல்ல; இந்த செழிப்பான நாட்டின் மக்களை, காலங்காலமாக, காங்கிரஸ் கட்சி, ஏழைகளாகவே வைத்து விட்டது. அரசியலுக்காக அவர்கள், இவ்வாறு செய்து வருகின்றனர். காங்கிரஸ் ஏழைகளைப் பற்றி பேசுகிறது; ஆனால் தேர்தல் சமயத்தில் மட்டுமே அவர்களைப் பற்றி நினைக்கிறது. ஏழைகள் குறித்து காங்கிரசார் பல ஆண்டுகளாக பேசி வருகின்றனர்; ஆனால் ஏழைகளின் நிலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. 60 ஆண்டு காலமாக மாற்றம் அடையாத நிலை குறித்து என்னுடைய கருத்து இதுதான்: ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருப்பதில்தான் காங்கிரசின் எதிர்காலம் இருக்கிறது.தலித், பழங்குடியின மக்கள், பா.ஜ.,வுக்கு எதிரானவர்கள் என, பிரசாரம் செய்து வந்த காங்கிரஸ், நடந்து முடிந்த, நான்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவைப் பார்த்து, கலங்கிப் போயுள்ளது. நலிவடைந்த சமுதாய மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். எங்களுக்கு, 60 மாதம் ஆட்சி செய்ய அனுமதி தாருங்கள். உங்கள் நிலையை மாற்றிக் காண்பிக்கிறேன்.ஏழ்மை என்பதே, காங்கிரசாருக்கு, என்னவென்று தெரியாது. இந்த நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல, பா.ஜ.,வால் தான் முடியும். மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைய, ஓட்டளியுங்கள்.

ஓட்டு வங்கி அரசியல்:

ஓட்டு வங்கி அரசியலால், இத்தனை ஆண்டுகளும், ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட காங்கிரஸ், இந்த முறை, பலத்த அடி வாங்கப் போகிறது. பா.ஜ., வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, மக்களை சந்திக்கிறது. நல்ல நிர்வாகம் இல்லாமல், எந்த வளர்ச்சி திட்டங்களையும் செய்து விட முடியாது.அதனால் தான், 60 மாதங்கள் மட்டும் ஆட்சி செய்ய அனுமதி தாருங்கள் என, நான் கேட்கிறேன். காங்கிரஸ் கட்சி, தலித் மக்களையும், நலிவடைந்த மக்களையும், தன் சட்டை பாக்கெட்டில் வைத்திருப்பதாக கூறுகிறது. ஆம்... அவர்களை, மனிதர்களாக பாவிக்காததால் தான், அவர்களை, காங்கிரஸ் தன் சட்டைப் பையில் வைத்திருக்கிறது.

ஏழைகளை கிண்டல் செய்வதா:

ஒரு டீ விற்பனையாரை ( மோடி) காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நமது வறுமையைப் பயன்படுத்தி, காங்கிரஸ் பலன் அடைய நினைக்கிறது. ஏழைகளை ஓட்டு வங்கியாக கருதும் ஒரு கட்சியை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இது வெறுமனே ஒரு டீ விற்பனையாளரின் பிரச்னை மட்டுமல்ல. 5 ரூபாய்க்கும் 12 ரூபாய்க்கும் சாப்பாடு கிடைப்பதாக கூறுகின்றனர். இது ஏழைகளைக் கிண்டல் செய்வதல்லாமல் வேறு எப்படி எடுத்துக் கொள்வது? ஏழைகள் சிரமப்பட்டு வாழ முடியாமல் உயிர் விடுகின்றனர். மத்தியிலும் உபி.,யிலும் உள்ள அரசுகள், வறுமையைப் போக்க அக்கறை காட்டுவதில்லை. இங்குள்ள இளைஞர்களுக்குத் தேவையானது கிடைத்தால் அவர்கள் ஏன் தங்களுடைய நிலத்தையும் பெற்றோரையும் விட்டு விட்டு குஜராத்துக்கு வருகி்னறனர்? உ.பி.,யி்ல் கடவுள் கொடுத்த வளங்கள் ஏராளமாக உள்ளன. முயன்றால் 10 ஆண்டுகளில் இதர மாநிலங்களை உ.பி.மிஞ்சி விடும்

தந்தையும் மகனும் சவால்:

தற்போது தந்தையும் ( முலாயம் சிங்) மகனும் ( அகிலேஷ்) என்னைப் பின் தொடர்ந்து வருகின்றனர். காசியில் அவர்கள் இருவரும் எனக்கு சவால் விட்டுள்ளனர். "உ.பி.,யை குஜராத்தாக மாற்ற மோடியால் முடியாது" என்று சவால் விட்டுள்ளனர். நேதாஜியே ( முலாயம்) உங்களுக்கு குஜராத்தாக மாற்றுவதென்றால் என்னவென்று தெரியுமா? ஒவ்வொரு கிராமத்திலும் 24 மணி நேரமும் மினசப்ளை கிடைக்க வேண்டும். உண்மைதான். இது உங்களால் முடியாது. அதற்கு 56அங்குல மார்பு தேவை. கடந்த 10 ஆண்டாக குஜராத் வளர்ந்துள்ளது; வளர்ந்து வருகிறது. உங்களால் இது முடியாது. நீங்கள் உ.பி.,யை குஜராத்தாக மாற்றினால், குஜராத் மக்கள் உ,பி.,யைத் தேடி வருவார்கள். நீங்கள் பெண்களை மதிப்பதில்லை; அவர்கள் வளர்ச்சிக்கு உதவுவதும் இல்லை. நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டுமென்றால், முதலில் உ.பி.,யிலிருந்து அது அகற்றப்பட வேண்டும். நம்மிடம் கால்நடைகள் உள்ளன; மனிதர்கள், தண்ணீர், உணவு எல்லாமே இருக்கிறது. அப்படியானால் வெளியிலிருந்து ஏன் பால இறக்குமதி செய்ய வேண்டும்? குஜராத்தில் உள்ளது போல ஒரு அமுல் பால்பண்ணையை இங்கு உருவாக்க முடியாதா? நமது நாட்டில் விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும். உரங்களைப் பெறுவதற்காக விவசாயிகள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது; உர மூடைகளை வைத்துள்ள கிடங்குகளோ மூடிக் கிடக்கினறன.

முன்னேற்றப்பாதையில் பா.ஜ.,:

நாடு முன்னறே வேண்டும்; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை; பா.ஜ., மட்டுமே முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த தேவைகளை பா.ஜ.,வால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியம்.பள்ளித் தேர்வுகளை உரிய நேரத்தில் நடத்த முடியாத மாநில அரசு, கிடங்குளையும் தொழிற்சாலைகளையும் நடத்த முடியாது. தேர்வுகள் ரத்து செய்யப்படுவதால், இளைஞர்கள் ஆண்டுகளை இழக்கின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். விவசாயத்தை நாம் பாரம்பரிய விவசாயம், கால்நடை பராமரிப்பு, மரம் வளர்த்தல் என மூன்றாக பிரிக்க வேண்டும்; இதற்கு சரியான சிந்தனை, நோக்கம், தலைமை தேவை.தற்போதைய அரசு சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. நமது நாடு ஏழ்மையான நாடு அல்ல; நமது நாடு செழுமையான நாடு; மக்களும் செழி்ப்பாக இருக்க முடியும். இதற்கான முடிவை 2014 தேர்தலில் நாம் எடுத்தாக வேண்டும். தங்களுடைய குழந்தைகள் வேலை தேடி வெளியிடங்களுக்குச் செல்லும்போது, பெற்றோர் கவலைப்பட வேண்டி வரும்.
சேவகனைத் தேர்வு செய்யுங்கள்:


நீங்கள் கடந்த 60 ஆண்டாக உங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்; நான் உங்களிடம் கேட்பதெல்லாம் 60 மாதந்தான். எனக்கு 60 மாதம் மட்டுமே கொடுங்கள்; நீங்கள் இதுவரை தலைவர்களைத் தேர்ந்தெடுத்தீர்கள்; இப்போது ஒரு சேவகனைத் தேர்வு செய்யுங்கள். உங்களுடைய கனவுகளைப் பூர்த்தி செய்கிறோம். இன்று சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாள். "நீங்கள எனக்கு ரத்தம் கொடுங்கள்; உங்களுக்கு விடுதலை கொடுக்கிறேன்" என்று அவர் கூறினார். நான 60 மாத ஆட்சி மட்டுமே கேட்கிறேன். நான் உங்களுக்கு மகிழ்ச்சியை, அமைதியான வாழ்க்கையை தருகிறேன். நாம் உலகோடு போட்டியிட விரும்புகிறோம். அதற்கு உங்கள் ஆதரவு தேவை. நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்தால், உங்கள் அன்பிற்கு வளர்ச்சி என்ற வட்டியைச் சேர்த்து திருப்பித் தருவேன்.இந்த நாட்டையே, குஜராத் போல் மாற்றிக் காட்டுகிறேன்.எத்தனையோ தேர்தல்களை சந்தித்து விட்டோம். ஆனால், இது, வித்தியாசமான தேர்தல். இந்த நாட்டின் எதிர்காலத்தை மக்கள் முடிவு செய்து விட்ட தேர்தல். காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும், மக்கள் பிரியாவிடை அளிக்கும் தேர்தல் இது.இவ்வாறு மோடி பேசினார்.

No comments:

Post a Comment