Monday, January 27, 2014

நரேந்திர மோடி, டீ விற்றவர். பிரதமர் பதவிக்கு ஆசைப்பட வேண்டாம். தேவையானால், டில்லியில் காங்., மாநாட்டில் வந்து, டீ சப்ளை செய்யலாம்' எனத் தெரிவித்துள்ளார், ராஜ்யசபா எம்.பி.,யான, மணிசங்கர் அய்யர்.மோடி, தன் கடுமையான உழைப்பால் முன்னேறி, பா.ஜ., கட்சியில் நல்ல பெயர் எடுத்து, குஜராத்தின் முதல்வராகி, அதையும் பல துறைகளில் முன்னிலைப்படுத்தி வருவது, நாடறிந்த விஷயம்.மணிசங்கர் அய்யர் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர். டேராடூனில் உள்ள, 'டூன் ஸ்கூலில்' முன்னாள் பிரதமர் ராஜிவுடன் படித்தவர்.பின் தமிழகத்தில், மயிலாடுதுறை தொகுதியில் எம்.பி.,யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரது நண்பர் ராஜிவால் அமைச்சராக்கப்பட்டார்.எனவே, ஆதிக்கமிக்க எண்ணத்துடன், கீழ்த்தட்டு குடும்பத்தைச் சேர்ந்த மோடி, பிரதமராக வர இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், வெளிப்படுத்திய வார்த்தைகள் தான் இவை.'ஒரு சாதாரண பிரஜையும், இந்த நாட்டின் பிரதமராகலாம்; ஜனாதிபதியாகலாம்' என்ற, காந்திஜி போன்ற தலைவர்களின் கோட்பாட்டில் இருந்த காங்., இன்று, இவ்வாறு, கீழ்த்தரமான விமர்சனத்தைக் கூறி வரும் தலைவர்களைக் கொண்டதாக மாறிவிட்டது.சிறந்த நல்ல திட்டங்களை நிறைவேற்றியதையும், இனி நிறைவேற்ற இருக்கும் பெரும் திட்டங்களைப் பற்றியும், எதுவும் பேசாமல், தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது விரும்பத்தக்கதல்ல. பெருந்தலைவர் காமராஜர், கக்கன் போன்றவர்கள் என்ன கனவான்களா?பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி, உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜாரிலால் நந்தா, ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத், ஜெயில் சிங், வெங்கட்ராமன், கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் போன்றோர், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான்.நேருவின் வாரிசுகளான இந்திரா, ராஜிவ், ராகுல் போல் எண்ணிக் கொண்டு, மணிசங்கர் இப்படி பேசுவது, அவருக்குத் தகுதியாக இல்லை.ஒதுக்கப்பட்டிருந்த இனத்தவரை, ஜாதியைக் கூறி இழிவாக எண்ணுவது, சட்டப்படி எவ்வாறு குற்றமோ, அதுபோல, செய்த தொழிலை தாழ்மைப்படுத்திப் பேசுவதும் தவறு தான்.சுய சிந்தனை அவசியம்!

No comments:

Post a Comment