Friday, January 24, 2014




திண்டிவனம்: திண்டிவனம் அருகே சீரமைப்பு பணியின்போது ஏராளமான கற்சிலைகள் கிடைத்தன. இதை கண்டு கிராம மக்கள் பரசவம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கொல்லியங்குணம் கிராமத்தில் விளைநிலத்தின் மையப்பகுதியில் பழமை வாய்ந்த சிவன் கோயில் இருந்துள்ளது. பல வருடங்களாக யாரும் செல்லாத காரணத்தால் கோயிலை முட்செடிகள் சூழ்ந்து புதர் போல் காணப்பட்டது.நேற்று 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராம மக்கள் அப்பகுதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பழுதடைந்த கிணறு ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அருகில் இருந்த செடி கொடிகளை அகற்றியபோது விசித்திரமான சாமி சிலைகள், கற்சிலைகள் காணப்பட்டன. மண்ணில் புதைந்த நிலையில் 11க்கும் மேற்பட்ட சிலைகள் வெளியே எடுக்கப்பட்டன. இந்த தகவல் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதால் கிராம மக்கள் பெருமளவில் திரண்டனர்.

தொடர்ந்து கற்பூரம் காட்டி சிலைகளுக்கு பூஜை செய்து வணங்கினர். கிராம மக்கள் கூறுகையில், சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு மக்கள் யாரும் செல்லாமல் இருந்தோம். நேற்று சிலை இருப்பதை கண்டு பரவசம் அடைந்தோம். விஞ்ஞானம் வளராத காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு மேலும் பல சிலைகள் புதைந்திருக்கும் என்று கருதுகிறோம். 19ம் நூற்றாண்டின் கன்னிமார் சிலைகளாக இருக்கலாம் என்றனர்.

No comments:

Post a Comment