Wednesday, January 22, 2014

நமது தேச தந்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

1897ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இதே நாளில் (ஜனவரி 23) ஒரிசாவில் உள்ள கட்டாக்கில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் மகனாக பிறந்தார்.

லண்டனில் வேலை செய்து வந்த நேதாஜி, ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பிறகு அந்நிய நாட்டில் இனிமேல் இருக்க கூடாது, நாட்டின் சுதந்திரத்திற்க்காக போராட வேண்டும் என்று தாயகம் திரும்பி காங்கிரஸில் சேர்ந்தார்.

நேதாஜி அவர்கள் காங்கிரஸ் தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், ‘நேதாஜி’ என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1939 ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி, அவருக்கு எதிராக நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், அவர்கள் போட்டியிட மறுக்கவே “பட்டாபி சீதாராமையாவை” நிறுத்தினார். ஆனால், பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே, தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால், நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார்.

பின்னர் பல வெளிநாடுகளுக்கு சென்று இந்திய சுதந்திரத்திற்கு ஆதரவு தேடினார். சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பையும் ஏற்படுத்தியதோடு, பெர்லினில் இந்திய வானொலியையும் தொடங்கினார்.
“ராஷ் பிகாரி போஸ்” தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே “இந்திய தேசிய ராணுவப்படையை” கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார்.

இந்திய தேசிய ராணுவப்படை சில தோல்விகளை தழுவியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை” “ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார்.

ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.

----------------------------------------

No comments:

Post a Comment