Friday, October 25, 2013


போலி கோஷங்களும் பொய்மை வேஷங்களும்...

First Published : 25 October 2013
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் அரசியல் சதுரங்கத்தில் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தும் காரியத்தில் ஈடுபட்டுவருகின்றன. நரேந்திர மோடி பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டதும் வகுப்புவாத எதிர்ப்பு வேள்வியில் தங்கள் வாழ்க்கையை முற்றாக அர்ப்பணித்துவிட்டவர்கள் சிறுபான்மையினர் நலன் காக்க நவீன குருúக்ஷத்திரத்தில் வந்து குவிந்துவிட்டனர்.
ஒரு பக்கம் "மதச்சார்பின்மை' என்ற மந்திரகோலை மகிழ்ச்சியுடன் காங்கிரஸ் கையில் பிடித்துக் கொண்டது. மறுபக்கம் வகுப்பு வெறியை வளர்த்தெடுக்கும் சக்திகளை முறியடிக்க நம் காம்ரேடுகள் சுத்தியலும் அரிவாளும் சுமந்தபடி மூன்றாவது அணியமைக்கும் பணியில் முனைப்புடன் இறங்கிவிட்டனர்.
இந்த வகுப்புவாத எதிர்ப்பாளர்கள் உண்மையில் சிறுபான்மையினர் நலனில் நாட்டமுள்ளவர்களா? அல்லது அவர்களது வாக்கு வங்கியை தங்கள் அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்த வெறும் "வாய் வேதாந்தம்' பேசுபவர்களா?
மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துவிட்டது. ராகுலை பகிரங்கமாக அறிவிக்க ஆசையிருந்தாலும் அறிவித்தால் வெற்றி மங்கை மாலை சூட்ட வருவாளா என்ற அச்சம் காங்கிரûஸ அலைக்கழிக்கிறது. ஒருவர் பெயரை முன்மொழிந்தால் மற்றவர்கள் ஓடிவிடுவார்கள் என்ற கவலை காம்ரேடுகளை ஆட்டிப் படைக்கிறது. பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிப்பது இந்திய ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என்று இருதரப்பும் அறிவித்துவிட்டன. ஜனநாயக நடைமுறையை பழுதுபடாமல் பராமரிக்கும் காங்கிரûஸயும் காம்ரேடுகளையும் நினைக்கும்போதே நெஞ்சம் சிலிர்க்கிறது.
ஜெயலலிதா, முலாயம்சிங், நிதிஷ்
குமார், நவீன் பட்நாயக், தேவகவுடா, ஜகன்மோகன் ரெட்டி போன்ற மாநிலத் தலைவர்களை உள்ளடக்கிய மூன்றாவது அணிதான் நாடு காக்கும், மதச்சார்பற்ற, சிறுபான்மையினர் நலம் காக்கும் நல்லரசை உருவாக்கக் கூடியது என்று மார்க்சியர்கள் முடிவெடித்துவிட்டனர்.
மூன்றாவது அணியில் இடம்பெறவேண்டும் என்று காம்ரேடுகள் அடையாளம் காட்டும் மாநிலத் தலைவர்களின் கடந்த காலம் எப்படிப்பட்டது? தமிழகத்தில் பா.ஜ.க. வேர் பிடித்து வளர்வதற்கு முதலில் வேண்டிய நீர் ஊற்றியவர் ஜெயலலிதா. பின்பு அதற்கு உரமிட்டு மரமாக்கி மகிழ்ந்தவர் கருணாநிதி.
1998-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வரவேற்பு ராகம் வாசித்தவர் ஜெயலலிதா. அப்போது, "அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மதவாத நச்சரவத்தைக் கொண்டு வந்து சேர்ந்தவர் ஜெயலலிதா' என்றும், "பா.ஜ.க. ஒரு ஆக்டோபஸ்' என்றும், "பா.ஜ.க.வில் உள்ளவர்கள் பண்டாரம், பரதேசிகள்' என்றும் கடும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவர் கருணாநிதி. ஆனால் அடுத்த ஆண்டிலேயே தேர்தல் திருமணத்தில் பா.ஜ.க.வின் மாப்பிள்ளைத் தோழனாக அவர் அவதாரம் எடுத்தார்.
மோடியின் நிர்வாகத்தில் 2002-இல் முஸ்லிம் சமுதாயம் பேரழிவைச் சந்தித்ததாகக் கூறப்படும்போது, மத்திய அரசில் வாஜ்பாய் பக்கத்தில் ஆதரவுக் கரம் நீட்டியபடி அமர்ந்திருந்தவர்தான் கருணாநிதி. குஜராத் படுகொலை பற்றிய கேள்விக்கு, "அது ஒரு மாநிலத்தின் பிரச்னை' என்று கருத்து வழங்கி நழுவிக் கொண்டவர்கள்தான்
திமுகவினர். குஜராத் படுகொலைக்குப் பின்பும் மோடியிடம் நல்லன்புடன் நட்பு பாராட்டிய ஜெயலலிதா, அவர் மீண்டும் முதல்வரானதும் தனிவிமானத்தில் சென்று நேரில் நல்வாழ்த்து வழங்கி மகிழ்ந்ததை புதிய அம்மா பக்தர்கள் மறைக்கப் பார்க்கலாம். ஆனால் மார்க்சியர்கள் மறக்கக் கூடுமா?
மாயாவதியும், முலாயம்சிங்கும் பிறவி பா.ஜ.க. எதிர்ப்பாளர்களா? பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்திரப்பிரதேச முதல்வராக இருந்தவர் கல்யாண்சிங். அவருடைய ஆசியுடன்தான் அந்த கயமைத்தனம் அன்று அரங்கேறியது. "பாபர் மசூதி இடிப்பு கடவுளின் தீர்ப்பு' என்று பரவசப்பட்ட கல்யாண்சிங் பா.ஜ.க.விலிருந்து வெளியேறியபோது, பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியை விரிவாக்க அவரை அரவணைத்துக் கொண்டு அரசியல் நடத்தியவர் முலாயம்சிங். இதைவிட மோசமான அரசியல் சந்தர்ப்பவாதம் வேறுண்டா?
பா.ஜ.க.வோடு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டவர் மாயாவதி. பா.ஜ.க. துணையோடு ஒடிஸா முதல்வராக வலம் வந்தவர் நவீன் பட்நாயக். பிகாரில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலிகளில் பா.ஜ.க. ஆதரவோடு வெற்றிக் கனியைச் சுவைத்தவர் நிதிஷ்குமார்.
அவருக்கு மோடிதான் பிரச்சினை, பா.ஜ.க. அல்ல. "சாறுவேண்டும்' இறைச்சி வேண்டாம் என்பவர் வள்ளலார் வாரிசு என்றால், நிதிஷ்குமாரும் வகுப்புவாத எதிர்ப்பாளர்கள்தான்.
தேவகவுடா சந்தர்ப்பவாத அரசியலில் கருணாநிதியையும் மிஞ்சியவர். மதசார்பற்ற ஜனதாதளம் என்று பெயர் வைத்துக் கொண்டு கர்நாடகத்தில் பா.ஜ.க. உதவியோடு, தன் மகன் குமாரசாமியை முதல்வராக்கிய கொள்கை வேந்தர் அவர். இவர்கள்தான் மார்க்சியர்கள் திரட்டும் பரிவாரத்துக்கு வீரத்தளபதிகளாக விளங்கப் போகின்றவர்கள்.
போகட்டும், இந்த மூன்றாவது அணியில் இடம் பெறுபவர்கள் ஊழல் காங்கிரûஸ வீழ்த்துவதற்கான தார்மிக தகுதியுள்ள நெறிசார்ந்த நேர்மையாளர்களா?
மாயாவதி ஒரு தபால்துறை ஊழியருக்கு மகளாகப் பிறந்தவர். பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தவர். இன்று ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தும் அரசியல் தலைவராக வளர்ந்து நிற்பவர். அமெரிக்காவுடன் மன்மோகன் அரசு உருவாக்கிய அணுக்கொள்கையை எதிர்த்து ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் வாங்கிய பிரகாஷ் காரத் இந்த மாயாவதியைதான் இந்தியப் பிரதமராக்க முயன்றார். மார்க்சும் ஏங்கல்சும் ஊழல்வாதிகளுக்குப் பதவி நாற்காலியைப் பரிசாகத் தரவேண்டுமென்று பரிந்துரைத்தார்களா? நமக்குப் புரியவில்லை.
யாதவர்களின் சாதிவாக்கையும், இஸ்லாமியரின் மதவாக்கையும் பெற்றப் பெரிய மனிதராக அரசியலரங்கில் காட்சி தரும் முலாயம்சிங் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, லோகியா, சரண்சிங் நிழலில் வளர்ந்து இன்று குபேர வசதிகளுடன் வாழ்ந்து வருபவர். பெரியாரின் பெயர் சொல்லும் கருணாநிதியும், லோகியாவின் பெருமை பேசும் முலாயம்சிங்கும் எல்லா வகையிலும் ஒரு பறவையின் இருசிறகுகள் என்பதுதான் உண்மை. இந்த முலாமைத்தான் மூன்றாவது அணியமைக்க நம் காம்ரேடுகள் முழுமையாக நம்பியுள்ளனர்.
ஊழலில் ஊறித் திளைக்கும் தேவகவுடா, ஊழலின் மறுவடிவமான மாயாவதி, ஊழலுக்கு உற்சவம் நடத்திப் பலநூறு கோடியைத் திரட்டி வைத்த ராஜசேகர ரெட்டியின் திருமகன் ஜெகன்மோகன்ரெட்டி, பெங்களூரு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்புக்குக் காத்திருக்கும் ஜெயலலிதா, தமிழகத்தையே ஊழல் மாயமாக்கிய கருணாநிதி... இவர்கள்தான் மதவாத எதிர்ப்பாளர்களா? நேற்று பா.ஜ.க.வோடு இருந்த இவர்கள், தேர்தலுக்குப் பின்பு பா.ஜ.க.வின் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டோம் என்று மார்க்சியர்கள் நீட்டிய பத்திரத்தில் கையொப்பமிட்டு உத்தரவாதம் வழங்கியிருக்கிறார்களா? அது போகட்டும், மதச்சார்பற்ற மம்தாவை ஏன் சேர்க்காமல் விட்டுவிட்டீர்கள்?
தான் பிரதமராக வரும் வாய்ப்பு இல்லாத நிலையில், ஜெயலலிதா மோடியின் பக்கம் நின்றால், அப்போது மதச்சார்பின்மை கொடி பிடித்து மோடியின் ரத்தம் படிந்த முகத்தைக் காட்டி ஓலமிடும் 14 காரட் காம்ரேடுகள் என்ன செய்வார்கள்? இரண்டு எம்.பி. தொகுதிகளுக்கு போயஸ் தோட்டத்தில் தவமிருக்கும் காம்ரேடுகளுக்கு, சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காகவே அதிமுக இப்போது பா.ஜ.க.விடமிருந்து விலகி நிற்கிறது என்பது தெரியாதா? அந்த அளவுக்கு இடதுசாரிகள் அரசியல் அப்பாவிகளா?
எதற்கும் இருக்கட்டும் என்று கருணாநிதி கடிதம் ஒன்று வரைந்து ஆதரவு கேட்கும் சாக்கில் பா.ஜ.க. திண்ணையில் இப்போதே ஒரு துண்டு போட்டு வைத்திருப்பதன் நோக்கம் என்ன? 1996 முதல் மிக நீண்டகாலம் மத்திய அரசில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் அல்லாத ஒரே மாநிலக் கட்சி தி.மு.கழகம்தான் தெரியுமா? இந்திரர்கள் மாறுவார்கள். இந்திராணி மாறுவதில்லை என்ற புராண வாசகத்தை அரசியலில் உண்மையாக்கிய கருணாநிதி நாளை பா.ஜ.க.வோடு போகமாட்டார் என்பது என்ன நிச்சயம்? விவஸ்தை கெட்ட அரசியலில் விவேகத்திற்கு இடமுண்டா? சிறுபான்மையினர் விழித்துக் கொள்ளவேண்டும்.
கடந்த ஒன்பதாண்டுகளில் காங்கிரஸ் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஊழலில் உச்சம் தொட்டது. ஆட்சியைத் தக்கவைக்க எம்.பி.க்களை ஏலம் எடுத்தது. தன்னோடு இணங்கி வராத கட்சிகளை சி.பி.ஐ. மூலம் வளைத்துப் போட்டது. கிரிமினல் தலைவர்களின் பதவியைப் பாதுகாக்க அவசரசட்டம் தீட்ட முயன்றது.
நிலக்கரி ஊழலில் நீதியைத் தடுக்க ஆவணங்களை மறைத்து வைத்தது. கார்பரேட் நிறுவனங்களின் குற்றங்களுக்கு உடந்தையானது. பொம்மை பிரதமரை முன் நிறுத்தி ஒரு குடும்பம் அதிகாரத்தை முற்றுரிமையாக்க அனுமதித்தது.
ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களை இலங்கை அரசு கொன்று குவிக்க உதவி செய்தது. அன்றாடம் தமிழக மீனவர்கள் சிங்களரால் துன்புறுத்தப்படுவதை வேடிக்கை பார்க்கிறது. அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்துகிறது.
இந்த மலினமான மக்கள் விரோத அரசை அகற்ற மார்க்சியர்கள் அமைக்கும் மூன்றாவது அணியில், சிறுபான்மையினரை எப்பொழுதும் வெறும் வாக்கு வங்கியாகவே பயன்படுத்திக் கொள்ளும் சுயநலக் கட்சிகள், போலி கோஷத்தோடும் பொய்மை வேஷத்தோடும் "மதச்சார்பின்மை நவீன நாடகம்' நடத்தும் நோக்கில் இணையவிருக்கின்றன. 1996 முதல்
1999 வரை இது போன்ற மூன்றாவது அணியால்தான் மூன்று தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்தன. மூன்றாண்டுகளில் மூன்று பிரதமர்கள் பரிபாலனம் செய்தனர். இடதுசாரிகளால் இந்த மோசமான வரலாறு மீண்டும் திரும்பினால் இந்தியா தாங்காது.
கட்டுரையாளர்:
தலைவர், காந்தி மக்கள் இயக்கம்

No comments:

Post a Comment