Thursday, October 17, 2013

நரேந்திர மோடி அலையால் உத்தரபிரதேசம், பீகாரில் காங்கிரஸ் மற்றும் முலாயம்சிங், நிதிஷ் குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் தான் மத்தியில் ஆட்சி அமைக்கும் சக்தியாக இருந்து வருகிறது. இங்கு வெற்றி பெறும் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் என 4 அணிகள் உருவான பின்பு நிலைமை மாறி விட்டது. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தொடர்ந்து தோற்றாலும் மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தொடர்ந்து ஆட்சியில் நீடித்து வருகிறது.

இதே போல் பீகார் மாநிலமும் மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கும், லல்லு பிரசாத் யாதவுக்கும் குறைந்த இடங்கள் கிடைத்தன.

தற்போது பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்து விட்டது. மேலும் லல்லு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிறை சென்று விட்டார். இதனால் அங்கும் நிலைமை மாறி விட்டது.

தற்போது உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் நரேந்திரமோடி அலை வீசுவதாக எக்காமிக்ஸ் டைம்ஸ் – ஏ.சி.நீல்சன் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 120 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இப்போது தேர்தல் நடந்தால் இந்த இரு மாநிலங்களிலும் 44 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம், பீகாரில் 23 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. தற்போது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியிலும் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சியிலும் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாலும் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

இதன் மூலம் பீகாரிலும், உத்தரபிரதேசத்திலும் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக திகழும். உத்தரபிரதேசத்தில் மட்டும் 27 தொகுதிகள் கிடைக்கும். பீகாரில் 17 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணக்கில் தெரிய வந்துள்ளது.

இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் 2009–ல் 21 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தற்போது 12 தொகுதிகள்தான் கிடைக்கும்.

பீகாரில் கடந்த தேர்தலில் 4 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு அந்த முறை 2 தொகுதிகள்தான் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.

உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மாயாவதி கட்சிக்கு 20 இடங்களும், முலாயம்சிங் கட்சிக்கு 16 இடங்களும் தான் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மாயாவதியை விட முலாயம்சிங் யாதவின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது. அந்த கட்சிக்கு தற்போது இருக்கும் 23 எம்.பி.க்களின் எண்ணிக்கை 16 ஆக குறையும்.

பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தற்போது இருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 20–ல் இருந்து 10 ஆக குறையும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

இந்த இரு மாநிலங்களிலும் நரேந்திர மோடியா? ராகுல் காந்தியா? என்று நேரடியாக கேள்வி கேட்டால் நரேந்திர மோடிக்குத்தான் ஆதரவு என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்

No comments:

Post a Comment