Monday, October 21, 2013


மோடியின் கேள்விகள்

சென்னையில் "இந்தியாவும் உலகமும்' என்கிற தலைப்பில் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்த வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிட்ட இரண்டு கருத்துகள் சிந்தனைக்குரியவை. நரேந்திர மோடி கூறியிருக்கிறார் என்பதாலேயே அந்தக் கருத்துகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது விதண்டாவாதமாக இருக்குமே தவிர, புத்திசாலித்தனமாகாது.
அப்படி என்னதான் சொல்லிவிட்டார் நரேந்திர மோடி? முதலாவதாக, அவர் குறிப்பிட்டிருப்பது "இந்தியா என்பது தில்லி மட்டுமே அல்ல' என்பது. அதாவது, முப்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்களை உள்ளடக்கிய சமஷ்டி அமைப்புதான் இந்தியாவே தவிர, மொகலாய சாம்ராஜ்ய, பிரிட்டிஷ் காலனிய நடைமுறையிலான, தில்லியின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் குறுநில நாடுகளாக செயல்படும் அமைப்பல்ல இந்தியா என்பதை வலியுறுத்துகிறார் மோடி.
இந்தக் கருத்தைத்தான் முன்பு சோஷலிஸ்டுகளும், கூட்டணி ஆட்சிகள் அமையத் தொடங்கியது முதல் இடதுசாரிகளும் சொல்லி வந்திருக்கிறார்கள் என்பதால், மோடியின் கருத்தை மறுதலிப்பது சரியாகாது. மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் என்கிற, மாநில சுயாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்ததுதான் நரேந்திர மோடியின் கூற்றும்.
எத்தனையோ சர்வதேச நிகழ்வுகள் நடக்கின்றன. பிற நாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள், இரு நாடுகளுக்கிடையேயான பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன, பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
"இவையெல்லாம் ஏன் தில்லியிலேயே நடைபெற வேண்டும்? மதுரையிலோ, மைசூரிலோ, புவனேஸ்வரத்திலோ, வடேதராவிலோ, குவாஹாட்டியிலோ, கோலாப்பூரிலோ நடக்கக் கூடாதா? அப்படி சர்வதேச நிகழ்வுகள் பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களிலும், பிற முக்கியமான நகரங்களிலும் நடைபெற்றால்தானே, அந்தந்தப் பகுதிகளின் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும்? எல்லா மாநிலங்களிலும் உள்ளவர்கள் இந்தியா என்பது எங்கேயோ தூரத்தில் இருக்கும் தில்லி மட்டுமல்ல, நமது மாநிலமும்தான் என்கிற உணர்வுடன் இருப்பார்கள்?' என்பதுதான் நரேந்திர மோடி எழுப்பி இருக்கும் நியாயமான கேள்வி.
வெளிநாடுகளில் நரேந்திர மோடி குறிப்பிடும் முறைதான் கையாளப்படுகிறது. ஜப்பானில் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் நடந்த ஜி-20 மாநாடு டோக்கியோவில் நடைபெறவில்லை. ஹொக்கைடோ என்கிற நகரத்தில்தான் நடந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்னால் பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியனின் மாநாடு, தலைநகர் பாரீசில் நடத்தப்படவில்லை, மார்செய்ல்ஸ் நகரத்தில்தான் நடந்தது. அதுபோல, பல மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய யூனியனில் ஏன் மாநிலங்கள் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்கிற நரேந்திர மோடியின் கேள்வி சிந்தனைக்குரியது மட்டுமல்ல, செயல்படுத்தப்பட வேண்டியதுமாகும்.
நரேந்திர மோடி வெளிப்படுத்திய இரண்டாவது கருத்து, இந்திய நிர்வாகத்தில் நிலவும் மெத்தனப்போக்கும், பொறுப்பின்மையும் பற்றியது. கோப்புகள் காணாமல் போகின்றன. பிரதமர், "கோப்புகளைக் காவல் காப்பது எனது வேலையல்ல' என்று சர்வ சாதாரணமாக பதிலளிக்கிறார்.
மீனவர்கள் அண்டை நாடுகளால் சிறைபிடிக்கப்படுகிறார்கள், மத்திய அரசு பிரச்னைக்குத் தீர்வு காணாமல் சமரசம் பேசுகிறோம் என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.
எல்லையில் ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள், "அதற்கும் பாகிஸ்தானிய ராணுவத்துக்கும் தொடர்பில்லை' என்று பாதுகாப்பு அமைச்சரே நற்சான்றிதழ் கொடுக்கிறார்.
ஆயுதங்களுடன் ஒரு கப்பல் கடலோரக் காவல் படையினரால் பிடிக்கப்படுகிறது, தேசியப் பாதுகாப்பு அலுவலக அதிகாரி, "12 கடல் மைல்களுக்கு அப்பால் கப்பல் நின்று கொண்டிருந்ததால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது' என்று அறிக்கை விடுக்கிறார்.
இப்படி, யாருக்குமே தேசப்பற்றோ, நிர்வாகத்தின் மீது கட்டுப்பாடோ, பொறுப்போ இல்லாத தன்மை இந்தியாவைப் பற்றியிருக்கும் மிகப்பெரிய புற்றுநோய். பிரதமர் அலுவலகத்தில் தொடங்கி பஞ்சாயத்து அலுவலகம் வரை எந்தவொரு தவறுக்கும் யாரும் பொறுப்பேற்காத நிலைமை. எந்தவொரு மக்கள் பிரச்னைக்கும் பொதுநலன் கருதியும், தொலைநோக்குப் பார்வையுடனும் உடனடியகாத் தீர்வு காணத் தயாராக இல்லாத நிலையில் இயங்குகிறது நமது நிர்வாக இயந்திரம். இந்த மெத்தனப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் நரேந்திர மோடி.
நரேந்திர மோடி எந்த சார்பைச் சேர்ந்தவராக இருந்தால்தான் என்ன? அவரது கருத்தில் நியாயம் இருக்கிறதா, தேசத்தின் நலன் இருக்கிறதா என்பதுதான் முக்கியம். இன்றைய இந்திய இளைஞர்கள் வெளிப்படுத்தத் தெரியாமல், ஆனால் எழுப்ப நினைக்கும் இரண்டு கேள்விகளை நரேந்திர மோடி எழுப்பி இருக்கிறார். இவற்றுக்கான விடை காணப்பட்டாலே போதும். வலிமை மிக்க இந்தியா உருவாகிவிடும்!

No comments:

Post a Comment