Sunday, July 14, 2013

சேது கால்வாய் திட்டம்: உண்மை என்ன?
ஊ.முருகையா, கடற்படை கமாண்டர் (பணி நிறைவு), சிவகாசியிலிருந்து எழுதுகிறார்: என், 35 ஆண்டு கடல்சார் பணிகளில் கிடைத்த அனுபவத்தை கொண்டு, சேது கால்வாய் திட்டத்தின் லாப, நஷ்டத்தை பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதிக நீளம் இல்லாத, சூயஸ் கால்வாயும், பனாமா கால்வாயும் இரு கடலுக்கு இடையே உள்ள, நிலப்பரப்பில் தோண்டப்பட்டு, இரு புறமும் மதில் எழுப்பப்பட்டு, கடல் மண்ணால், கால்வாய் மேவாத அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
கால்வாயின் இரண்டு புறம் உள்ள, கடல் பகுதியின் தரை மட்டம், கால்வாயின் தரை மட்டத்தை விட அதிகமாக இருக்கும். எனவே, இயற்கை சீற்றத்தாலும், ஆழ்கடல் மணல் அரிப்பாலும், ஆழ்கடல் நீரோட்டத்தாலும் கால்வாயின் ஆழத்துக்கு எந்த பாதிப்பும் இங்கு இல்லை. இதன் மராமத்து செலவும் மிகக் குறைவு. கப்பல் போக்குவரத்து மிக அதிகம். எனவே, வருமானம் அதிகம். சேது சமுத்திர கால்வாய் திட்டம், இதற்கு எதிர் மாறாக உள்ளது. சேது கால்வாய் திட்டம் என்பது, நடுக்கடலில் ஆழம் தோண்டி கால்வாய் அமைப்பது. இயற்கையை எதிர்த்து, நாம் போராட முடியாது. உலகில் உள்ள, அனைத்து கடல்சார் அமைப்புகளுக்கும், பாக் - ஜலசந்தி, மன்னார் வளைகுடாவைப் பற்றி நன்கு தெரியும். உலகிலேயே, மிக அதிகமான ஆழ்கடல் நீரோட்டம் உள்ளது இப்பகுதி. திசை மாறி மாறி வீசும் காற்றின் வேகமும், இந்தப் பகுதியில் தான் அதிகம்.
நாம் மணல் தோண்டிக் கொண்டே போனால், பின்னால், மணல் மேவிக் கொண்டே இருக்கும். இப்பகுதியில், கடலில், ஆறு மணிக்கு ஒரு முறை, நீர் மட்டம் ஏறும், இறங்கும். இந்த கால்வாயின் நீளம் அதிகமாக இருப்பதால், கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ள நேரத்திற்குள், கால்வாயை கடக்க முடியாது. காற்றின் வேகம், அதிகப்பட்டால் கப்பல் நேர் கோட்டில் செல்ல முடியாது. எவ்வளவு திறமை வாய்ந்த கேப்டன்களாக இருந்தாலும், தவறு நடந்து விடும். ஒரு கப்பல் சுற்றி வந்தால் நேரமும், எரிபொருளும் கூடுதல் ஆகும் என்பது சரி. 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு கப்பலை, இம்மாதிரி பயணித்து விட்டு தரைதட்ட விடுவரா? சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள எந்த கால்வாயையும், கப்பல் கேப்டன்கள் புறக்கணித்து விடுவர். பின், நாம் கடையை திறந்து என்ன பிரயோஜனம்? கல்லா பெட்டி நிறைய வேண்டுமல்லவா?
முழு சுமையோடு வரும் கப்பல், தரையில் உட்கார்ந்து விட்டால், பின் இந்த கால்வாயின் பூகோளமே மாறிவிடும். இந்த கால்வாய் மராமத்துக்கு பின் ஆழம் தோண்டிக் கொண்டே இருக்க வேண்டும். குறைந்தது, ஆழம் தோண்டும், 10, "டிரெட்ஜர்' கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டும். நாம் செலவு செய்யும் பணத்துக்கு, வட்டி கூட கட்ட முடியாது. பின் ஏது வருமானம்? இப்பிரச்னையை வைத்து, பலர், பாமர மக்களை திசை திருப்பி அரசியல் செய்கின்றனர். இதுவரை, மக்கள் வரிப்பணத்தை, கடலில் கொட்டியது போதும். மக்கள் அறிவாளி ஆகிவிட்டனர். இனி, மக்களை ஏமாற்ற முடியாது. உண்மையிலேயே, தமிழ் மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், தென்னக நதிகளை இணைக்க பாடுபடட்டும். மக்களுக்கு, ஓரளவு ருசியான குடி தண்ணீராவது கிடைக்கும்.

No comments:

Post a Comment