Monday, June 24, 2013

அரசியல் சட்டத்தின், 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும். அப்போது தான், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணையும்' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
வலை பக்கத்தில்
பா.ஜ., கட்சியின் நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜியின், 60வது நினைவு நாளையொட்டி, சமூக வலை தளத்தில் உள்ள தன் வலைப்பக்கத்தில் அத்வானி எழுதியுள்ளதாவது:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு, சிறப்பு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்கும், அரசியல் சட்டத்தின், 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்பது, பா.ஜ.,வின் முக்கியமான கோரிக்கை. கூட்டணி கட்சிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே, இந்தக் கோரிக்கையை, பா.ஜ., நீண்ட நாட்களாக எழுப்பவில்லை.
ஆனால், அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு ரத்து செய்யப்படும் நாளை, நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டால் தான், ஜம்மு - காஷ்மீர், இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணையும்.
ஆரம்பத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்குள், மற்ற மாநிலத்தவர்கள் செல்ல வேண்டும் எனில், அனுமதிச் சீட்டு பெறும் முறை அமலில் இருந்தது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் அப்போதைய பிரதமர் ஷேக் அப்துல்லா, இந்த முறையை அறிமுகப்படுத்தியிருந்தார்.
சிறையில் அடைப்பு
இதற்கு எதிராக குரல் கொடுத்தவர், ஷியாம பிரசாத் முகர்ஜி. உரிய அனுமதி பெறாமல், அவர் ஜம்மு - காஷ்மீருக்குள் நுழைந்த போது, கைது செய்யப்பட்டு, பின் நீதிமன்ற காவலில் இருந்த போது, உடல் நலம் குன்றி இறந்தார்.
ஷியாம பிரசாத் முகர்ஜி மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவே, ஜம்மு - காஷ்மீரில், பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அம்மாநிலத்திற்குள் செல்ல, அனுமதிச் சீட்டு பெறும் முறை ரத்து செய்யப்பட்டது.
அம்மாநிலத்தில், பிரதமர் என, அழைக்கப்பட்டவர், மற்ற மாநிலங்களைப் போல, முதல்வர் என, அழைக்கப்பட்டார். இருந்தாலும், இன்னும் பல மாற்றங்களும் நிகழ வேண்டும்.
இவ்வாறு, அத்வானி கூறியுள்ளார்...........அன்புடன் ;சக்குடி ஸ்ரீனிவாசன்

No comments:

Post a Comment