Thursday, June 13, 2013

Tuesday at 3:44pm ·
 • போராளியின் மறுபெயர் யாரென்று சொன்னால், உடனடியாக நரேந்திர மோடியை உதாரணம் காட்டலாம். அந்த அளவுக்கு சிறு வயதில் இருந்தே, எந்த ஒரு கடினமான விஷயத்தையும் கூட, நாம் தோற்றுவிடுவோம் என்று எண்ணிவிடாமல் தொடர்ந்து போராட்ட குணத்துடன் அதனுடன் மோதி வெற்றி கண்டு வருபவர் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி. பா.ஜ.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சில் பாலபாடம் கற்று இன்று பா.ஜ.வில் பிரசாரக்குழு தலைவர் என்ற உயரிய பொறுப்புக்கு வந்துள்ளார். அடுத்தது. இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பிரதமர் பதவியில் அவரை அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று பா.ஜ. முடிவு செய்துள்ளது. எப்போதுமே போராளிகளின் வாழ்க்கையை சற்று பின்னோக்கி பார்த்தால், அது நெஞ்சை பிழிவதாகத்தான் இருக்கும் என்பார்கள். அது மோடியின் வாழ்க்கையிலும் சில அத்தியாயங்களாக பதிந்து கிடக்கின்றன. அந்த பிஞ்சு செடியில் இடப்பட்ட இன்னல்கள் என்னும் உரத்தை தன்னுள் வாங்கி, இன்று ஆலமாக விருட்சமாக வளர்ந்து பலருக்கு வாழ்வளித்து கொண்டிருக்கிறார் மோடி. 1950ம் ஆண்டு செப்டம்பர் மாதம், குஜராத்தின் வத்நகரில், தாமோதரதாஸ் மூல்சந்த் மோடி , ஹீராபென் என்ற விவசாய தம்பதியின் 3வது மகனாக பிறந்தவர் மோடி. விவசாயி என்றாலே வறுமைதானே சொத்து.

  குடும்பத்தில் கடுமையான வறுமை நிலவியதால், அவரது மூத்த சகோதரர் டீக்கடை ஒன்றை போட்டார். அதில் மோடியும் அவரது சகோதரர்களும் வேலை பார்த்தனர். டீ கிளாஸ்களை கழுவி சுத்தமாக வைப்பது மோடியின் பணிகளில் ஒன்று. எந்த பணி என்றாலும் என்ன, செய்யும் நுணுக்கத்தில்தான் ஒருவரின் திறன் வெளிப்படும். அதேபோல், டீ கிளாஸ்களை மிக சுத்தமாக கழுவி துடைத்து வைத்துவிடுவார் மோடி. இந்தக் கடையில் வேலை பார்த்துக் கொண்டே அவர் பள்ளிப்படிப்பையும் முடித்தார். பள்ளி நேரத்தை தவிர பெரும்பாலான நேரத்தில் கடையில்தான் இருக்க வேண்டும். இரவு 11 மணிக்கு பின்னர் கொஞ்ச நேரம் படிப்பதற்கு நேரம் கிடைக்கும். இந்த நேரத்தில்தான் அவர் படித்துக் கொள்ள வேண்டும். லட்சியங்களை கனவாக கொண்ட மோடிக்கு அது பெரும் கஷ்டமாக இல்லை. ஆனால், பரீட்சையில் மார்க்தான் அவரிடம் வசப்படாமல் இருந்தது. 1960ம் ஆண்டு நடுப்பகுதியில் இந்தியா , பாகிஸ்தான் போர் நடந்தது. அந்த 10 வயதிலேயே அவர் ரயில் நிலையத்தில் ராணுவ வீரர்களுக்கு உதவும் தன்னார்வ தொண்டு பணியை செய்தார். 1967ல் குஜராத்தை வெள்ளம் பாதித்தபோதும் இரவு, பகல் பாராமல் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டார். இதற்கு எல்லாம் அடித்தளமாக இருந்தது, அவர் இணைந்திருந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்புதான். கஷ்டப்பட்டு பள்ளிப்படிப்பை முடித்த மோடி, குடும்பத்தினரிடம் கெஞ்சிக்கூத்தாடி கல்லூரியில் சேர அனுமதி வாங்கினார்.

  கல்லூரியில் அவர் எடுத்துக் கொண்ட படிப்பு எம்.ஏ. அரசியல். சிறுவயதில் இருந்தே மோடியிடம் ஒரு பிடிவாத குணம், எதையும், எதிலும் போராடி பார்த்துவிடுவது என்பதுதான். எல்லோரும் ஒரு விஷயத்தை சாதாரண கோணத்தில் பார்த்தால் மோடி மட்டும் மாறுபட்ட கோணத்தில் இருந்து அதை பார்த்தார். அந்த கலை, இன்றைய கடினமான அரசியல் சூழ்நிலையிலும் அவருக்கு வெற்றியை தேடித் தந்துக் கொண்டிருக்கிறது என்றால், அது மிகையாகாது. கல்லூரி படிப்பில் முதுகலை அரசியல் பாடம் படித்த மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் இணைந்து பணியாற்றினார். அவரது அபார உழைப்பு, போராட்ட குணம், எதிலும் பின்வாங்காத தன்மை ஆகியவற்றை பார்த்து பிரசாரகர் பதவியை கொடுத்து அழகு பார்த்தது அந்த அமைப்பு. நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, தலைமறைவு வாழ்க்கையில் அதை எதிர்த்து போராடினார் மோடி. 1987ல் முதல் முறையாக அரசியல் நீரோட்டத்தில் அவர் இணைகிறார். பா.ஜ.வில் இணைந்த மோடி, குஜராத் மாநிலம் முழுவதும் அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டார். அவரது அபாரமான நடவடிக்கைகளை பார்த்து வியந்த தலைமை, அடுத்த ஒரு ஆண்டிலேயே அவரை கட்சியின் மாநில செயலாளராக ஆக்கியது. 1995ல் குஜராத்தில் நடந்த தேர்தலில் மோடியின் வியூகத்தினால், பா.ஜ. செல்வாக்கு பெற்றது.

  1987 , 1995 இடைப்பட்ட காலத்தில் மோடி மிகப்பெரிய ராஜதந்திரி என்பதை பா.ஜ. மட்டுமின்றி குஜராத்தும் புரிந்துக் கொண்டது. அத்வானியின் ரத யாத்திரை வெற்றிகரமாக நடத்தி தந்தது மோடிதான். ரத யாத்திரையில் கிடைத்த செல்வாக்கால், 1998ல் பா.ஜ. மத்தியில் ஆட்சியை பிடித்தது. மோடியை நன்கு பயன்படுத்திக் கொள்ள நினைத்த பா.ஜ தலைமை அவருக்கு கட்சியின் தேசிய செயலாளர் பதவியை அளித்தது. மேலும், 5 மாநிலங்களின் கட்சிப் பொறுப்பையும் அவரிடம் அளித்தது. அந்த இளம் வயதில் மோடியை தவிர வேறு யாருக்கும் இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை பா.ஜ. தரவில்லை. இந்த சமயத்தில்தான் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. மற்ற மாநிலங்களையே கண்ணை ஒத்திக்கொண்டு பார்த்த மோடி, சொந்த மாநிலத்தை எப்படி பார்த்துக் கொள்வார்? குஜராத்தில் எந்தெந்த வேட்பாளர்களை நிறுத்தினால் வெற்றிவாகை கிடைக்கும் என்பதை ஆராய்ந்து சரியான வேட்பாளர்களை தேர்வு செய்து தேர்தல் களத்துக்கு அனுப்பி வைத்தார். அவர் எதிர்பார்த்தபடி, குஜராத்தில் பா.ஜ. ஆட்சியை பிடித்தது. தன்னுடைய குரு என்று மோடியால் கூறப்பட்டு வந்த கேசுபாய் படேல் முதல்வராக பொறுப்பேற்றார். அவரது போதாதகாலம் போலும். குஜராத்தை மிகப்பெரிய பூகம்பம் புரட்டிப்போட்டது. நிவாரணப் பணிகளை முதல்வர் பதவியில் இருந்த கேசுபாய் படேல் சரியாக முடுக்கிவிடவில்லை என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், கேசுபாய் படேல் திறமையாக செயல்படாத முதல்வர் என்றும் புகார்கள் கூறப்பட்டன. கட்சியின் செல்வாக்கு சரிவதை பார்த்த பா.ஜ. தலைமை கேசுபாய்க்கு பதில் யாரை அந்த பொறுப்புக்கு நியமிக்கலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டது. முதலும் கடைசியுமாக அந்த வாய்ப்பில் இருந்த ஒரே நபர் மோடிதான். ஆனால், இளம்வயது, அனுபவமின்மை என்று பல காரணங்களை சில வயது முதிர்ந்த தலைவர்கள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கூறினர்.

  திறமை அற்றவர்; அவரை துணை முதல்வராக்கலாம் என்று அத்வானி அப்போது வெளிப்படையாக கூறினார். பொறுப்பை கொடுத்தால், முழுமையாக கொடுங்கள். அதில் தோல்வியுற்றால் பின்னர் பேசுங்கள் என்று மோடி தடாலடியாக ஒரு போடுபோட்டார். அனுபவமிக்க தலைவர்கள் மோடியின் கருத்தில் இருந்த உண்மைக்கு சலாம் போட்டனர். அவரை முதல்வராக ஆக்கியது பா.ஜ. ஆனால், ஒரு ஆண்டிலேயே பா.ஜ. ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது. குறுகிய பதவிக்காலத்திலேயே மோடி செய்த சாதனைகள் பலப்பல. முதலாவதாக அவர் செய்தது, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள்தான். பூகம்பம் பாதித்த பகுதிகளில் அடிப்படை வசதிகள் கிடைக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையும் பார்த்த மக்கள் மீண்டும் அவரது தலைமையிலான ஆட்சிக்கு வாக்குகளை அள்ளி, அள்ளித்தந்தனர். மீண்டும் அமோகமாக வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்தார் மோடி. அன்றிலிருந்து இன்று வரையில் அவரது வளர்ச்சி வேகத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. வளர்ச்சி என்பது சாதாரணமாக வந்துவிடாது. இதற்கு அவர் பாடுபட்டது ஏராளம். இன்று குஜராத் மாநிலம் தொழில் வளர்ச்சியில் மிகச்சிறப்பான இடத்தை பிடித்துள்ளதும் இதுதான் காரணம். சமீபத்தில் நடந்த குஜராத் மாநில தேர்தலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவரை எப்படியும் வீழ்த்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டன. காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி முதல் மன்மோகன் சிங் வரையில் பறந்து, பறந்து சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். மோடியின் பலம் என்றால், அது அவரது சாதனைகள்தானே. 3வது முறையாகவும் மோடி ஆட்சியைப் பிடித்தார். மோடிக்கு முஸ்லிம்கள் ஓட்டுபோட மாட்டார்கள் என்று தீவிர பிரசாரம் நடந்து வந்த நிலையில், ஒரு நல்ல தலைவரை கைதூக்கிவிட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா என்ன?

  முஸ்லிம்களும் அவரது வாக்குகளை வாரி வழங்கினர். அப்போதே அவரை பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராகவும், பா.ஜ. தொண்டர்கள் மட்டுமின்றி மக்களும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவரான ராகுல் காந்திதான் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் பதவி வேட்பாளராக முன் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டத்தில், மோடிக்கு கட்சியின் உயரிய பதவியான பிரசாரக்குழு தலைவர் பதவியை கொடுப்பது என்று பெரும்பாலான தலைவர்கள் முடிவு செய்தனர். இதை அறிந்துக் கொண்ட அத்வானி, அந்த கூட்டத்துக்கு செல்லவில்லை. அவரது ஆதரவாளர்களும் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். நாடு சென்று கொண்டிருக்கும் வேகத்தில், இன்னமும் பழைய கருத்துகளுக்கு இடம் அளிப்பது சிறப்பாக இருக்காது என்பதை புரிந்து கொண்ட ராஜ்நாத் சிங், பல்வேறு எதிர்ப்புகளையும் புறந்தள்ளி, இப்பதவிக்கு மோடியின் பெயரை அறிவித்தார். முன் மக்கள் முன் மக்களே என்பது பழமொழி. பெரிய பதவிக்கு அறிவிக்கப்பட்ட அடுத்த விநாடியே, மோடி செய்த முதல் காரியம் அத்வானியிடம் பேசியதுதான். என்னதான் ஒருவர் கீழே இறங்கிவந்தாலும், சிலர் தங்கள் பிடிவாதத்தை மாற்றிக் கொள்வதில்லை. அதில் அத்வானியும் ஒருவர். வயதிலும், கட்சியிலும் மிக மூத்தவரான அத்வானி, மோடிக்கு பதவி கொடுத்ததை எதிர்க்கும் வகையில் கட்சியின் அனைத்து பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். மோடியின் செல்வாக்கு கூடி வருவது, அவரது கட்சி தலைவர்களின் எதிர்ப்பிலேயே உணர முடிகிறது. அடுத்து வரும் மக்களவை தேர்தல், இளம் தலைவரை உயர்ந்த பதவிக்கு கொண்டு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  சோஷியல் மீடியாவில் உச்சத்தில் மோடி:

  பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் எங்கு பார்த்தாலும் இப்போது நரேந்திர மோடியை பற்றிய பேச்சுதான்.
  ஆரம்பத்தில் மோடியை அனுபவமில்லாதவர், திறமையற்றவர் என்றெல்லாம் காரணம்காட்டி அவரை ஒதுக்க நினைத்தார்கள். ஆனால், அதெல்லாம் பொய் என நிரூபித்து, சீனா கண்டு வரும் வளர்ச்சியை போல், குஜராத்தின் அபார வளர்ச்சிக்கு வித்திட்டார் மோடி. தொழில்வளர்ச்சியில் எல்லா மாநிலங்களையும் ஒருபடி பின்னுக்கு தள்ளி முன்னேறிக் கொண்டிருக்கிறது குஜராத். தேசிய வளர்ச்சி புள்ளிவிவரம் உதாரணம்.
  இதையடுத்து, இந்த கோஷம் எடுபடாது என்று நினைத்தவர்கள், மோடிக்கு எதிராக மதவாத கோஷத்தை எடுத்துக் கொண்டனர். மோடி ஒரு தரப்புக்கு மட்டுமே ஆதரவானவர் என்று பிரசாரம் செய்தனர். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில், அதையும் பொய் என்று நிரூபித்து காட்டினார் மோடி. காரணம், முன்னெப்போதும் இல்லாத வகையில், முஸ்லிம்களின் ஆதரவுடன் அவர் பெரும் வெற்றி பெற்றார். இப்போது மோடிக்கு எதிராக வேறு என்ன கோஷத்தை எடுக்கலாம் என்று எதிராளிகள் சிந்தித்துக் கொண்டிருப்பதாக டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். சீனாவுக்கு ஈடாக இந்தியாவை வல்லரசாக ஆக்க மோடியை போன்ற தலைவரால் தான் முடியும் என்று பல தரப்பினரும் உணரத்துவங்கி விட்டனர். வெறும் வாய்ஜால வாக்குறுதிகளால் இனி மக்களை ஏமாற்ற முடியாது. அடுத்த நிமிடமே, சோஷியல் மீடியாக்களில் விமர்சிக்கப்படும் நிலை உருவாகி விட்டது. இந்த வகையில் மோடிக்கு இதில் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

  சோளப்பொரியை போட்டு திமிங்கலம் பிடித்தவர்

  எங்கு ஒருவருக்கு வேலை இருக்கிறதோ, அங்கு வெட்டிப் பேச்சுகள் இருக்காது என்பது சீன பழமொழி. அதைதான் என்னுடைய பணியாக கொண்டுள்ளேன் என்று மோடி அடிக்கடி கூறுவது வழக்கம்.இதன் எதிரொலியாக தன்னுடைய மாநிலத்தில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர் எடுத்தார். மேற்குவங்க மாநிலத்தில் இருந்து டாடா கார் தயாரிப்பு நிறுவனம் துரத்தியடிக்கப்பட்டபோது, பலகோடி வரிச்சலுகைகளையும், ஏராளமான நிலங்களையும் அளித்து, அதை தன்னுடைய மாநிலத்துக்கு மோடி கொண்டு வந்தார். மோடியின் ராஜதந்திரம் அங்குதான் வேலை செய்தது. சோளப் பொரியை கொடுத்து, திமிங்கலத்தை அவர் பிடித்தது இப்போதுதான் எல்லா மாநிலங்களுக்கும் புரிய வருகிறது.

  டாடா தொழிற்சாலை மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. டாடா நிறுவனமே இடம் மாறிவிட்ட பின்னர் தங்களுக்கு என்ன வேலை என்று பல குட்டி நிறுவனங்கள், தாங்களாகவே, பசுவின் பின்னால் செல்லும் கன்றுகளை போன்று குஜராத் மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தன.மின்தட்டுப்பாடு என்பது இப்போது எல்லா மாநிலங்களிலும் சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால், குஜராத்தில், மின்தடை என்ற பேச்சே யாருக்கும் தெரியாது.

  அந்த அளவுக்கு மின்னுற்பத்தியில் உபரி மாநிலமாக திகழ்கிறது குஜராத். இதிலும் மோடியின் ராஜதந்திரம்தான். 10 தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்தால், ஒரு மின்னுற்பத்தி நிலையத்துக்கு திட்டம் தீட்டுவது அவரது வழக்கமாக இருந்தது. சூரிய மின்சக்தியை பெருக்குவதற்கும் பெருமளவில் நடவடிக்கை எடுத்துள்ளார். கிராமங்களில் பொது விளக்குகளுக்கு மின்சாரம் தருவது சூரிய மின்சக்தி பேனல்கள். ஆரம்பத்தில் இதற்கான செலவு அதிகமாக தெரிந்தாலும், பின்னாளில் அதன் பலன் மிக அதிகம் என்பதை மோடி உணர்ந்திருக்கிறார்.அன்புடன்  ,,   அன்புடன்;சக்குடி ஸ்ரீனிவாசன் 

No comments:

Post a Comment