Monday, June 24, 2013

குஜராத் முதல்வர் மோடி, நேரடியாகவே களத்தில் இறங்கினார். ஹெலிகாப்டர், நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் உதவியுடன், 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். அதோடு நின்றுவிடாத மோடி, உள்ளூர் பா.ஜ., தொண்டர்கள் உதவியுடன், நிவராண முகாம்களை ஏற்படுத்தினார்.

வெள்ளம், நிலச்சரிவால் உத்தரகண்ட், மாநிலமே உருக்குலைந்து விட்டது. பல மாநிலங்களில் இருந்து, புனித யாத்திரை சென்ற பக்தர்கள், இதில் சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்கும் பணியில், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களை சொந்த ஊர் அழைத்து வர, அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

களத்தில் மோடி!

அங்கு, மீட்பு பணிகளை பார்வையிட தலைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.""அவர்கள் செல்வதால் மீட்புப்பணி பாதிக்கப்படும்; அப்பகுதிகளை பார்வையிட, எனக்கே அனுமதியில்லை. உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவுக்கு மட்டுமே அனுமதி,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார். ஆனால், இதை மோடி பொருட்படுத்தவில்லை. குஜராத் மாநிலத்தவர்களை பாதுகாப்பாக மீட்க, நேரடியாகவே களத்தில் இறங்கினார்.

ஒரே இரவில்... :

ஜூன் 21ம் தேதி மாலை, உத்தரகண்ட் புறப்பட்ட அவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஐந்து பேர், தலா ஒரு ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள், ஜி.ஏ.எஸ்., (குஜராத் மாநில நிர்வாகம்) அதிகாரிகள் இருவர், டி.எஸ்.பி.,க்கள் இருவர், இன்ஸ்பெக்டர்கள் ஐந்து பேர் என, டேராடூன் சென்றார்; அங்கு தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டது. ஒருங்கிணைப்பு பணிக்காக, டில்லி, டேராடூனில் தலா ஒருவர்; குஜராத்தில் இருவர் என, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்."குஜராத் பக்தர்கள் எந்தெந்த இடங்களில் உள்ளனர்; மீட்பு பணிகளை எவ்வாறு செய்வது' என்பது குறித்து, நள்ளிரவு, 1:00 மணி வரை, மோடி ஆலோசனை நடத்தினார்.

நவீனம்... நவீனம்:

மறுநாள், மீட்புப்பணிகள் துரிதம் அடைந்தன. போக்குவரத்து இல்லாத இடங்களில், ராணுவத்தினர் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம், 15 ஆயிரம் பக்தர்கள் மீட்கப்பட்டனர். மீட்பு பணியில், நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் பெரும் பங்கு வகித்தன.மீட்கப்பட்டோர், முதலில் சாலை வசதி உள்ள இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, பின், டேராடூன் சென்றனர். அங்கிருந்து சாலை மற்றும் வான்வழியாக குஜராத் புறப்பட்டனர்.இதற்காக, "இனோவா' கார்கள்-80, சொகுசு பேருந்துகள்-25, "போயிங்' ரக விமானங்கள்- 4 ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும், மோடியின் மேற்பார்வையில் நடந்தது.

அரவணைப்பு:

குஜராத் மக்களை மீட்டதோடு மட்டுமின்றி, உள்ளூர் பா.ஜ., தொண்டர்கள் மூலம், பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரண முகாம்களை, மோடி அமைத்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டன. எந்த இடத்தில் உணவு மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் கிடைக்கும்? என்ற விவரங்கள், அந்த முகாம்கள் மூலம் தெரிவிக்கப்பட்டன.

ஹெலிகாப்டரில் ஆய்வு:

இதற்கிடையே, மிகவும் பாதிக்கப்பட்ட தேவபிரயாக், பத்ரிநாத், டெக்ரிடேம், ருத்ரபிரயாக், கர்னபிரயாக், சமோலி, கவுரிகண்ட், கேதர்காதி ஆகிய பகுதிகளை, ஹெலிகாப்டர் மூலம் மோடி பார்வையிட்டார். மேலும், ஹரித்வாரில், குஜராத் அரசால் அமைக்கப்பட்ட, நிவாரண முகாம்களில் இருந்த மக்களை சந்தித்தார்.

கோவிலை புதுப்பிக்க...:

உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவையும், மோடி சந்தித்தார். ""நிவாரணப் பணிகளில் உதவ, குஜராத் எப்போதும் தயாராக இருக்கிறது,'' என, தெரிவித்த மோடி, கேதார்நாத் கோவிலை, இயற்கை சீற்றங்களில் பாதிக்காத வகையில், நவீன தொழில்நுட்பம் மூலம் சீரமைப்பது குறித்து, பகுகுணாவிடம் ஆலோசனை செய்தார். ஆனால், பகுகுணா அதை நிராகரித்து விட்டார்.மோடியின் மீட்புப்பணி குறித்து கருத்து தெரிவித்த காங்., கட்சியினர், "அவர்,குஜராத்திகளை மட்டுமே மீட்டுள்ளார். அது அவரது கடமை' என, வழக்கம் போல குற்றஞ்சாட்டினர். ஆனால், உள்ளூர் பா.ஜ., தொண்டர்கள் மூலம், நிவாரண முகாம்களை, மோடி ஏற்படுத்தியது குறித்து, வாய் திறக்க மறுத்து விட்டனர்."அங்குள்ள காங்., தொண்டர்களை பயன்படுத்தி, நிவாரணப் பணிகளை, அக்கட்சி தலைவர்களும் செய்திருக்கலாமே. அந்த யோசனை, காங்., கட்சியினருக்கு ஏன் வரவில்லை' என, கேள்வி எழுப்புகின்றனர், மோடி ஆதரவாளர்கள்........அன்புடன் ,சக்குடி ஸ்ரீனிவாசன் 

No comments:

Post a Comment