Tuesday, May 21, 2013

உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதில், நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால், இங்கு நடைபெறும் கலவரங்கள், வன்முறை சம்பவங்கள், பஸ் தீ வைப்பு, கொலை, கடையடைப்பு, மரம் வெட்டுவது, சாலை மறியல் ஆகியவை, ஏன் நடக்கின்றன? எதற்காக நடத்துகின்றனர்? ஜாதி, மதம் சிறுபான்மையினர் எனக் கட்சிகள் கூப்பாடு போடுவது எதற்காக? தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக! "நாங்கள் இல்லாமல் ஜெயிக்க முடியாது. இவ்வளவு சீட் கொடுத்தால் கூட்டணி' என, பெரிய கட்சிகளுடன் பேரம் பேசி, கூட்டணி அமைத்து, வெற்றி பெற்ற பின், அக்கூட்டணியில் இருந்து விலகுவது; பின், வேறு கட்சியினருடன் கூட்டு! இதில், மக்கள் தீர்ப்பு எங்கே? அக்கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டவர்கள் கதி என்ன? உண்மையான ஜனநாயகம் மலர வேண்டுமானால், தேர்தல் ஆணையம், மத்திய அரசுடன் இணைந்து, மக்களின் பிரதிநிதித்துவ சட்டத்தை மாற்ற வேண்டும். ஒரு கட்சி, தன் சொந்த பலத்தில் போட்டியிட வேண்டும். மக்களவைத் தேர்தலானாலும் சரி, பஞ்சாயத்து தேர்தலானாலும் சரி, தனித்து தான் போட்டி; மற்ற தோழமை கட்சியினருடன், கூட்டணி வைத்து போட்டியிடக் கூடாது என்பதை, சட்டமாக்க வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் ஓட்டு வாங்கவில்லையானால், அந்தக் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். இந்த நிலை வருமானால், வன்முறை கலாசாரம், இந்தியா முழுமைக்கும், படிப்படியாக ஒழிந்து விடும்; இவ்வளவு கட்சிகளும் இருக்காது; தான் விரும்பும் ஒரு தலைமைக்கு ஓட்டளித்த திருப்தியும், வாக்காளர்களுக்கு ஏற்படும். இது தான் உண்மையான ஜனநாயகம்! இந்த நிலை என்று வருமோ?

No comments:

Post a Comment