Friday, May 3, 2013

பிரதமர் மன்மோகன் சிங்கால், எதுவும் பேச முடியாது. டில்லியை விட்டு வெளியே வரும் போது மட்டுமே, அவரால் பேச முடியும். அதனால், கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார்,'' என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.
கர்நாடகாவில், வரும், 5ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக, நேற்று இறுதிக் கட்ட பிரசாரம் தீவிரமாக நடந்தது. பெல்காமில் நடைபெற்ற, பா.ஜ., பொதுக்கூட்டத்தில், குஜராத்

முதல்வர் நரேந்திர மோடி பேசியதாவது: பிரதமர் மன்மோகன் சிங்கால், டில்லியில் ஒரு வார்த்தை கூட பேச முடியாது. அது அவ்வளவு சுலபமான காரியமும் அல்ல. டில்லியை விட்டு, வெளியே வரும் போது பேசுவார். அதுவும் என்ன பேசும்படி, எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளதோ, அதையே பேசுவார். கர்நாடகாவில், சட்டசபை தேர்தலையொட்டி, சில வார்த்தைகள் பேசியுள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டிற்கு, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமயிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே காரணம். மத்திய அரசின் கொள்கை தடுமாற்றத்தால், நிலக்கரி சப்ளை முற்றிலும் குறைந்து விட்டது. நாட்டில், 30 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய, மின் நிலையங்கள், மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மின் உற்பத்தியை பெருக்குவதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, பெரிய பெரிய விமான நிலையங்களை கட்டுவதில் கவனம் செலுத்துகின்றனர். விமானத்தில் பறப்பது, தொழில் அதிபர்களுக்கு பணியாற்றுவது போன்றவற்றில்தான், காங்கிரசின் கவனம் முழுவதும் உள்ளது.காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ந்து, பல்வேறு வகையிலும் புறக்கணித்து வருகிறது.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

No comments:

Post a Comment