Wednesday, May 22, 2013

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்று சொல்லும், திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் தான், 1970 முதல், தமிழகம் முழுவதும், ஆங்கில வழியில் பள்ளி படிப்பைச் சொல்லித் தரும் நர்சரி மற்றும் மெட்ரிக் தனியார் பள்ளிகள், அதிக அளவில் உதயமாயின. ஆங்கில வழியில் கல்வி கற்றால் தான் கல்லூரி படிப்பும், வேலை வாய்ப்பும் எளிதாக இருக்கும் என்ற மாயை உருவாக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஆங்கிலப் பள்ளிகள், புற்றீசல் போல துவக்கப்பட்டன. இன்று, ஒவ்வொரு ஊரிலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை விட, தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. ஒரு நாட்டில், மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதில், முதன்மையாக இருக்க வேண்டியது கல்வி. ஆனால், சுதந்திரம் அடைந்து, 66 ஆண்டுகள் மேலாகியும், நமக்கு இன்று வரை, அது எட்டாக் கனியாக இருப்பதற்கு முக்கியக் காரணம், இங்கு ஏழை மாணவர்களுக்கு ஓர் கல்வி; வசதி படைத்தவர்களுக்கு ஓர் கல்வி என்ற முறை இருப்பதே. நல்ல வேளை, சமச்சீர் கல்வி, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இருந்த போதிலும், தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று, அரசுப் பள்ளி மாணவர்கள் சோபிக்க முடியவில்லை என்ற மனக் கவலை, ஏழை, எளிய மாணவர்களின் பெற்றோருக்கு இருந்து வந்தது. அதற்கு காரணமாக இருந்த, ஆங்கில வழிக் கல்வி, அனைத்துப் பள்ளிகளிலும் துவக்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளதும், அதை இந்த கல்வி ஆண்டு முதலேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழை, எளிய மாணவர்களின் பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டது. இனி, அவர்கள் தங்களது குழந்தைகளை, மாதம் பல நூறு ரூபாய் முதல், சில ஆயிரம் வரை செலவு செய்து, ஆங்கில பள்ளிகளில் படிக்க வைத்து, கடன்காரர்களாக மாறாமல் இருக்க வழிவகுக்கும். ஏழை, எளிய மாணவர்களும், தரமான ஆங்கிலக் கல்வியை கற்று, சமமாக முன்னேற வழி வகுக்கும். தனியார் ஆங்கில வழி பள்ளிகளின் ஆதிக்கம் அடங்கும்.

No comments:

Post a Comment