Monday, April 8, 2013

ராஜீவ் காந்தி சுவீடன் தரகராக இருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல்"
================
பிரதமர் ஆவதற்கு முன்பு போர் விமானங்கள் வாங்குவதில் இடைத்தரகராக ராஜிவ்காந்தி செயல்பட்டதாக விக்கி லீக்ஸ் தகவல்கள் வெளியிட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் விளக்கமளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது. மிக முக்கியமான ஆயுத பேரங்கள் குறித்து தகவல்கள் வெளிவரும் போது ராஜிவ் குடும்பத்தினர் பெயர்கள் மட்டுமே கூறப்படுவதாகவும் பாரதிய ஜனதா கூறியுள்ளது.

1970களில் ஸ்வீடன் நிறுவனமான சாப்-ஸ்கேனியா (Saab-Scania) என்ற நிறுவனம் இந்தியாவிற்கு விக்கென் (Viggen) போர் விமானங்களை விற்க முயன்ற போது அதற்கு இடைத்தரகராக ராஜிவ் செயல்பட்டதாக விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனாலும் அந்த பேரத்தில் சாப்-ஸ்கேனியா வெற்றி பெற வில்லை.

1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜிவிற்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக ஸ்வீடன் தூதரகத்தின் அதிகாரி மூலம் தகவல் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி ராஜிவை ஏர் இந்தியாவில் பைலட்டாக பணியாற்றுவதாக மட்டுமே அறிவதாகவும், அவரை தொழில் முனைவோராக இப்போதுதான் அறிகிறோம் என்று சுவீடன் தூதரகத்தில் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

அப்போது பிரதமாராக இருந்த இந்திரா காந்தி பிரிட்டனிடமிருந்து ஜாகுவார் விமானங்களை வாங்க விரும்பவில்லை என்ற தகவலும் சுவீடனிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. ராஜிவ் காந்தி அரசியலுக்கு வருவதற்கு முன்பு விமான ஓட்டியாக பணியாற்றி வந்தார்.

பா.ஜ.க., கடும் தாக்கு: பாதுகாப்புத் துறைக்கு காங்கிரஸ் அரசு செய்யும் ஒப்பந்தங்கள் அனைத்தும் சுவீடன் மற்றும் இத்தலி நாடுகளுடனேயே மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ராஜீவ் காந்தி குடும்பத்தினராலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் அக்குடும்பத்தினருக்கு உள்ள தொடர்புகளுக்கு இதுவரை விடை தெரியவில்லை. ஹெலிகாப்டர் ஊழலில் ஒரு குடும்பத்திற்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த குடும்பம் எது என்று தெரியவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேட்கர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment